பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

பிற நலப்பணிகள்

நெய்வணை என்று இந்நாளில் வழங்கும் ஊர் முன்னாளில் திருநெல் வெண்ணெய் என்று வழங்கப்பட்டது. இது சம்பந்தரால் பாடப்பட்ட தலம். முதற் குலோத்துங்க சோழனது 26-ஆவது ஆட்சியாண்டில் அரும்பாக் கிழான் வேண்டுகோட்படி இவ்வூர் சுங்கம் தவிர்த்த சோழநல்லூர் என்று பெயரிடப்பட்டது; பொற்குடம் கொடுத்தருளிய தேவர்க்கு நிலங்கள் அளிக்கப்பட்டன. (374 of 1908) இதில் அரும்பாக் கிழானுக்குப் பொற்கோயில் தொண்டைமான் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. (இப்பெயர் திருப்பாசூரிலுள்ள இவன் மகனைப்பற்றிய கல்வெட்டிலும் (128 of 1930) குறிக்கப் பெற்றுள்ளது.)

கீழுர் என்பது திருக் கோவலூரில் சிவன் கோயிலுள்ள பகுதி. இவ்வூரில் முதற் குலோத்துங்க சோழனுடைய 31-ஆம் ஆட்சியாண்டில் அரும்பாக்கிழான் இருக்கோவலூரான மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடத்தில் தெங்கந் தோட்டம் விலைக்குக் கொண்டு திருவீரட்டான முடையார்க்குத் திரு நந்தவனமாகக் கொடுத்தான் (264 of 1902; S.I.I. Vol VII No. 892) என்றுள்ளது.

தக்கோலம் என்பது முன்னாளில் திருவூறல் என்று வழங்கப்பட்டது. இது தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற தலம். முதற் குலோத்துங்கனுடைய 45ஆவது ஆட்சியாண்டில் சங்கரப்பாடி நகரத்தாரிடத்து அரும்பாக் கிழான் அறுபது பொன் கொடுத்துப் பத்து விளக்குகள் எரிக்க எற்பாடு செய்தான். இக்கல்வெட்டில் தக்கோலம்