உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

இவன் திருப்பாசூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்களை அளித்தனன்; அவற்றுள் ஒன்று பொன்னால் செய்த மகர தோரணமாகும்; அதன் முடியில் இரத்தினம்பதித்த குடை கவிக்கப்பட்டிருந்தது; அன்றியும் பொன்னாலாகிய முப்புரி நூலும், பலநூறு மணியும் இரத்தினங்களும் பதித்த, பொற்றகடும் மாதவராயன் அளித்தான்;[1] சில பசுக்களை அளித்து நான்கு விளக்குகளை எரியச் செய்தான். இவன் விக்கிரம சோழனது ஆட்சியில் இருந்தவன். இவனும் இவன் தந்தையைப் போல் சிவபக்தியில் சிறந்து விளங்கியவன் என்பது அறியத்தகும்.

முடிப்புரை

முதற்குலோத்துங்கனும், விக்கிரம சோழனும் பல சிவப்பணிகளை ஆற்றியுள்ளனர். விக்கிரமசோழனது தில்லைத்திருப்பணிகளைத் திருமழபாடிச் சாசனம்[2] விளக்கமாகக் கூறுகிறது. மன்னன் எவ்வழியோ அவ்வழியில் மன்னுயிர் மன்னும் ஆகையால் பேரரசர் போலவே அவர்களது உயர்தர அலுவலர்களும் சிவபக்தியிற் சிறந்து விளங்கினர் ; சிவப்பணிகள் ஒல்லும்வா யெல்லாம் செய்தார்கள். இற்றை ஞான்று சைவர்கள் ஆகிய நாம் புதிய பணிகளைச் செய்ய வேண்டியதில்லை; முன்னேர் செய்த சிவப்பணிகளை அழிவுறாவண்ணம் காத்தலும், பழுதுற்றவற்றைப் புகுக்குதலும் நாம் செய்ய வேண்டுவனவாம். இந்நெறியில் நின்று தில்லைத் திருமதில் போன்றவற்றைப் புதுக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் உதவினால் நரலோகவீரன் போன்றவர்களை நினைவு கூர்ந்து போற்றியவ ராவோம்.


  1. A. R. for 1930: Page 79; Para 22.
  2. S. I. I. Vo1. | II Part lI No. 79.