பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

பிரான்—எங்கள் பாக்கியப் பயன் வாழ்பதி குன்றத்தூர் இருப்பதும் இத்தொண்டை நன்னாடே.

வேளாளர் சிறப்பு

"வேளாளர் என்பவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர்” என்று ஞானசம்பந்தரால் புகழப் பெற்றவர்கள். 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்று சிறப்பிக்கப் பெற்றவர்கள் இவர்கள். “வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி" என்ற கம்பர் சொல்லுக்கு ஏற்ப அரசனுக்கு முடி கொடுக்கும் உரிமையுடையவர்கள் இவ்வேளாளர்கள். இவர்கள்,

"மேழி பிடிககுங்கை; வேல் வேந்தர் நோக்குங்குங்கை;
ஆழி தரித்தே அருளுங்கை;- சூழ்வினையை
நீக்குங்கை; என்றும் நிலைக்குங்கை; நீடுழிக்
காக்குங்கை; காராளர் கை"

எனப் புலவர்களால் பாராட்டப் பெற்றுள்ளார்கள். மேலும் வேளாளர்கள் பாராளும் திறலரசருக்கு வெற்றி விளைவிக்கும் தானைத் தலைவர்களாகவும் விளங்கினர்.

வாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர்
வாக் கரையர் சாக்கியர்கோட் புலிகஞ் சாறர்
ஏயர்கோன் கலிக்காமர் முளைவித் தாக்கும்
இளையான்றன் குடிமாறர் மூர்க்கர் செங்கைத்
தாயனார் செருத்துணையார் செருவில் வெம்போர்
சாதித்த முனையடுவார் ஆக நம்பி
பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர் தம்மில்
பதின் மூவர் வேளாளர் பகருங் காலே (செ. 17)

என்ற திருத் தொண்டர் புராண வரலாற்றிற்கண்ட வண்ணம் அறுபான் மும்மை நாயன்மார்களுள் பதின்மூவர் வேளாண் குலச் செம்மல்கள் ஆவர்.