உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

கிழார் இட்ட பெயராதல் கூடும். 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாசாரியார் இந்நூல் பாடியவரலாற்றைத் திருத்தொண்டர் புராண வரலாறு என்று தாமே பெயரிட்ட நூலில் ”சேண்டகைய திருத்தொண்டர் புராண மெனப் புராணத் திருமுறைக்குத் திருநாமம் சீர்பெற அமைத்திட்டு” (53) என்று பாடி யிருக்கின்றமையின் இந்நூலுக்குத் திருத்தொண்டர் புராணம் என்பதே முன் நாளிலும் வழங்கிய பெயராகக் கோடல் பொருந்தும். ”எடுக்கு மாக்கதை இன் தமிழ்ச் செய்யுளாய்” என்ற சேக்கிழார் வாக்கின்படி இதற்குப் பெரியபுராணம் என்ற பெயர் வந்தது என்று கூறுவாரு முளர். ஏனைய புராணங்களினும் சிறந்து விளங்கும் பெற்றியுடைத் தாதலின் இந்நூற்குப் பெரியபுராணம் என்ற பெயர் சாலவும் பொருந்தும.

இப்புராணத்துக்கு ஆதரவுகள்

சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகை இப் புராணத்துக்கு முதல் நூல்; நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி வழிநூல். இப் புராணம் அவற்றின் வழியே வந்த விரிநூல். மற்றும் வித்தகப்பாடல் முத்திறத்து அடியார் பாடிய திருநெறிய மெய்ஞ்ஞானத்தமிழ் ஆகிய தேவாரங்களும், காரைக்கால் அம்மையாருடைய அருள் நூல்களும், சேரமான் பெருமாள் நாயனார் போன்றவர்கள் அருளிய நூல்களும், செவிவழிச் செய்திகளும் இந்நூலுக்கு ஆதரவுகளாம். உமாபதி சிவாசாரியாரும் இவற்றை யெல்லாம் இந்நூலுக்கு உறுப்பாகவும், பொருள்கோள் உயிராகவும், விருத்தப்பா உடல் ஆகவும் கொண்டு நடந்தது என்று சுவைபடக் கூறுகிறார். (செய்யுள், 81.)