பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

பண்டாரத்தார் சோழர் சரித்திரம், பாகம் 2, பக்கம் 116.) பவணந்தி முனிவர் ஒரு சமணர் என்பது யாவரும் அறிந்ததே.

சீயகங்கனின் மனைவி

மேலே குறித்த திருவல்லத்துச் சாசனம், இவனது மனைவியின் பெயர் அரிய பிள்ளை என்று பகரும். இவள் மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய 34-ஆம் ஆட்சி யாண்டில் (கி. பி. 1212-ல்) திருவல்லத்திலுள்ள சிவன் கோயிலுக்குத் திருவிளக்கு வைக்க நிபந்தம் அளித்துள்ளனள்.

சீயகங்கனின் மக்கள்

இவனுடைய மகன் அருங்குன்றைப் பிள்ளையாரான செயகங்கன் (சீயகங்கன்) என்ற பெயருடையவன். அவன் திருக் காளத்தி ஈசர்க்குத் திருநுந்தா விளக்கு வைக்க 32-பசுக்கள் அளித்தனன். அவனுக்கு ஒரு தங்கை இருந்தாள் என்றும், அவள் வடவாயில் செல்வியாரான சந்திரகுல மாதேவியார் என்ற பெயருடையவள் என்றும் பிற்குறித்த கல்வெட்டினின்று அறியலாம்:

"ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு மூன்றவது உடையார் திருக்காளத்தி யுடையார்க்குக் குவளால புர பரமேஸ்வரர் சீயகங்கரான சூரநாயகர் மகள் வடவாயில் செல்வியாரான சந்திரகுல மாதேவியார் தமையனார் அருங் குன்றைப் பிள்ளையாரான செயகங்கர் திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு விட்ட சாவா மூவாப் பசு முப்பத்திரெண்டு" (195 of 1892; Vol IV No. 643.)