பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெருமான் நம்பிப் பல்லவராயன்

ஊரும் பேரும்

பெருமான் நம்பிப் பல்லவராயன் எனப்படுபவன் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஆமூர்க் கோட்டத்துக் காரிகைக் குளத்தூர் என்னும் ஊரவன். ஜெயங் கொண்ட சோழ மண்டலமென்பது முதலாம் இராசராச சோழன் காலத்திலிருந்து தொண்டை மண்டலத்துக்கு அமைந்த பெயர். தொண்டை மண்டலத்தின் இருபத்து நான்கு கோட்டங்களில் ஆமூர்க் கோட்டம் என்பதொன்று. அதிலொரு பகுதி சிறு குன்ற நாடு எனப்பட்டது; காரிகைக் குளத்தூர் உள்ள பகுதியே இது. அமிதசாகரர் என்பார் யாப்பருங்காலக் காரிகையைக் குளத்துணரிலிருந்து பாடிய காரணத்தால் குளத்தூர், காரிகைக் குளத்து என்று வழங்கலாயிற்று. இது இந்நாளில் பாலாற்றங் கரையில் செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள ஓரூராகும்.

இக்குளத்தூரில் வாழ்ந்த வேளாண் பெருமக்களில் ஒருவரே, குளத்துழான் திருச்சிற்றம்பல முடையான் பெருமான் நம்பியாரான பல்லவராயர். திருத்தொண்டர் புராண வரலாற்றாசிரியரும் வேளாண்குடிப் பெருமக்களுள் ஒரு வகையினர் எனக் குளத்துழான் குடியினரைக் குறிப்பிடுவர். இக் குளத்துழான் குடியிற் பிறந்தமையின் இக்குடிப் பெயர் இவன் பெயரோடிணைந்துள்ளது. பல்லவராயன் என்பது இரண்டாம் இராசராச சோழனால் அளிக்கப் பெற்ற சிறப்புப் பெயராகும்.