உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

துழார் குடியிற் பிறந்த பல்லவராயனான நம்பிப் பிள்ளை என்று குறித்துள்ளார்.

பல்லவராயன் பேட்டை

பல்லவராயன் பேட்டை என்னும் ஊர் மாயூரத்துக்கு அண்மையில் உள்ளது. முன்னாளில் இவ்வூர்க்குக் குளத்தூர் என்ற பெயர் இருந்தது. இக் குளத்தூர், பின்னர் இப்பல்லவராயன் பெயராலே பல்லவராயன் பேட்டை என்று வழங்கி வரலாயிற்று. இவ்வூரில் பல்லவராயன் தன் அரசன் பெயரால் இராசராசேச்சுரம் என்னும் கோயிலெடுப்பித்து, அதற்கு இறையிலியாக நிலமும் அளித்தான் என்று இரண்டாம் இராசராசனுடைய 10-ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 1156) க்குரிய கல்வெட்டுக் கூறுகிறது. (435 of 1924). இந்தக் கோயிலுக்கு நாங்கூர் அவையினர் காசு கொள்ளா ஊர்க் கீழ் இறையிலியாக நிலமளித்தனர் என்று இரண்டாம் இராசராசனுடைய 15-ஆம் ஆட்சியாண்டுக்குரிய பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டில் உள்ளது (11 of 1925). திரு இந்தளூர் (திருவழுந்தூர்) மகா சபையினர், ஒரு வாய்க்கால் வெட்டுவதற்காகக் கொண்ட இக் கோயில் நிலத்துக்குப் பதிலாக, ஊர்க்கீழ் இறையிலியாக ஏழுமா நிலத்தை இக்கோயிலுக்குக் கொடுத்து, அவ்விடத்தில் தீர்த்தக்குளம் ஒன்று வெட்டுவதற்கு உத்தரவும் பெற்றனர் (6 of 1925).

பல்லவராயன் இறந்த பிறகு இவ்வூரிலுள்ள நாற்பது வேலி நிலம் இவனுடைய மனைவி மக்கள் அனுபவிக்குமாறு இரண்டாம் இராசாதிராச சோழனால் அளிக்கப் பெற்ற செய்தி இவ்வூரில் கண்ட இன்னொரு சாசனத்தா (433 of 1924) அறியலாம்.