பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

(S. I. I. Vol VIII No. 850). ஸ்ரீ மணவாளன் பெருமாளுடையார் என்பது இங்கு எடுத்துக்கொண்ட தலைவனாகவே கருதல் தகும். இம் மணவாளன் பெருமாள் சேந்த மங்கலத்துள் ஊரும் படைவீடும் செய்து, வாணிலை கண்டீசுரமுடைய நாயனாரை எழுந்தருளப் பண்ணி அப் பெருமானுக்கு ஏழிசை மோகன் சந்தி என்ற நாள் வழிபாட்டையும் தொடங்கி நிபந்தம் விட்டான் என்று அக் கல்வெட்டில் உள்ளது. ’ஊரும் படை விடும் செய்து’ என்றதால் இவனே சேந்த மங்கலத்தை அரண் பொருந்திய ஊராக அமைத்தான் என்றும், ’வாணிலை கண்டீசுவர நாயனாரை எழுந்தருளப்பண்ணி’ என்றமையான் இவனே தன் சிறப்புப் பெயரால் கோயில் அமைத்து இறைவனை எழுந்தருள்வித்தான் என்றும், “இந்நாயனார்க்கு நாம் கண்ட ஏழிசைமோகன்சந்தி’ என்ற பகுதியால் இவன் தன் குலப்பெயராகிய ’ஏழிசை மோகன்’ என்ற பெயரால் நாள் வழிபாட்டை நியமித்து நிபந்தம் விட்டான் என்றும் அறிய வருகிறது.

முடிப்புரை

இதுகாறும் கூறியவற்றால் இவனும் இவன் முன்னோரும் சிறந்த சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர்கள் என்பதும், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனுக்கடுத்து வந்த மூன்றாம் இராசராச சோழன் காலத்திலும் இவன் திகழ்ந்தவன் என்பதும், முதலில் மூன்றாம் குலோத்துங்க சோழனாலே அபிமானிக்கப் பெற்று அவனால் சிறப்பிக்கப் பெற்றவனென்பதும், இவனே பின்னர்ச் சகல புவனச் சக்ரவர்த்திகள் முதற் கோப்பெருஞ் சிங்கனாக விளங்கினானென்பதும் அறியலாம்.