பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

இருபதின்மருக்கும், ஐந்து சிவயோகிகளுக்கும் [1] திருக்கோயிலில் அன்னம்பாலிக்கச் சிற்றிங்கணுடையான் ஏற்பாடு செய்தான். ’’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’’ என்றதை நன்குணர்ந்து பணியாற்றும் இத்தலைவன், பின்னும் குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் 50 பிராமணர்களுக்கு அன்னம் பாலிக்க நிலமளித்தான் என்று இன்னொரு சிலாலேகை[2] செப்புகின்றது.

பிராபாகரம்வக்காணித்தல்

திருக்குடமூக்கில் மூலப்பருடைப் பெருமக்கள்[3] சிற்றிங்கணுடையானுக்கு இரண்டாம் ஆதித்தனின் மூன்றாம் ஆட்சியாண்டில் இரண்டு மா நிலம் விற்றனர். அந்நிலத்தைப் பிராபாகரம் வக்காணிப்பார்க்குப் பட்ட விருத்தி[4] யாகச் சிற்றிங்கணுடையான் அளித்தனன் என்று ஒரு கல்லெழுத்து[5] நுவல்கின்றது.


  1. சிவபெருமானத் தியானம் புரிந்து யோகநெறியைப் பயில்பவர்; சிவயோகம் ஆவது யாதென்பதனை, ’’எப்பொருள் வந்துற்றிடினும்’’ என்ற உண்மைநெறி விளக்கச் செய்யுளால் அறிக. ’’சிவயோகி ஞானி செறிந்த அத்தேசம் - அவயோகமின்றி அறிவோருண் டாகும்’’ என்ற திருமந்திரத்தால் சிவ யோகிகளின் பெருமை விளங்கும் ; பிரமோத்தரகாண்டம் சிவயோகியர் மகிமைச் சருக்கமும் காண்க.
  2. 231 of 1911.
  3. திருக்குடமூக்கு - கும்பகோணம் ; மூலப்பருடைப் பெருமக்கள் - சிவன்கோயில் நிர்வாகத்தை நடத்தும் குழுவினர்.
  4. பட்டவிருத்தி - கல்வி வல்ல பிராமணருக்கு விடப்பெற்ற இறையிலி நிலம்.
  5. 233 of 1911 ; S. I. I. III 200.