பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

யாலும்” என்பது அச்சாஸனப்பகுதி. இதனால் இவன் இவ்வுத்தரவு நிறைவேற்ற ஆணத்தியாக இருந்தான் என்பது பெறப்படும். ஆனால் இதே சாஸனத்தில், யாண்டேழாவது நாள் 240-ல் கொடுக்கப்பெற்ற உத்தரவில், கருமம் ஆராய்கின்ற பரகேசரி மூவேந்த வேளான் மட்டும் குறிக்கப்பெறுகிறான். ஆகவே 7-ஆம் ஆட்சி யாண்டில் சிற்றிங்கண் உடையான் கோனேரிராசபுரத்தில் இல்லை என்பது தெளிவு. இனித் திருவிடைமருதுாரிற் கண்ட பரகேசரிவர்மனது ஆறாவது யாண்டுக் கல்லெழுத்தில் மீண்டும் இவன் திருவிடை மருதுாரிற் காணப்படுகின்றமையின், இவ்வுத்தம சோழன் ஆட்சியிலேயே மீண்டும் திருவிடைமருதூர்த் திருக்கோயில் அலுவலுக்கு இவன் வந்துவிட்டான் என்று கொள்ளலாம்.

முடிந்தது முடித்தல்

இதுகாறும் கூறியவாற்றான் சிற்றிங்கணுடையான் ஆதித்த கரிகாலன் காலத்தும் (ஆதாவது சுந்தரசோழன் ஆட்சிக்காலத்திலும்) சுந்தர சோழனுக்குப் பின்னர் ஆட்சி செய்த உத்தம சோழன் காலத்திலும் வாழ்ந்தவன் என்பதும், இவ்விருவராலும் சிறப்பிக்கப்பெற்றவன் என்பதும், திருவிடைமருதுார்க்கோயிலில் ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற அலுவலில் இருந்தான் என்பதும், இறை பணி நிற்றலில் சிறந்தவன் என்பதும், நாகரிகக் கலைகள் வளர்த்தவன் என்பதும், சமய அறிவைப் பரப்புவதில் ஆர்வங்கொண்டவன் என்பதும் பிறவும் தெளியப்பெறும். இங்ஙனம் இன்னோர் அன்னோர் வரலாறறிந்து அன்னோர் போல ஒழுகுவதற்கு முயல்வோமாக.

இடைமருதுறையும் எந்தாய் போற்றி !