பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34

ஸ்ரீ வடவீரநாராயணப் பெருமக்களும்,[1] ஊராள்கின்ற பல்லவ பிரம்மாதரயனும், கண்காணி அரும்பாக்கிழானும் கூடினர். தானம்[2] உடைய சிவபிராம்மணன் மாகண்டனன் திருக்கரபுரத்துப் பெருமாற்கு அருச்னாபோகமான தோட்டமும் நிலமும் ஆறும்[3] உடைந்து மணல் மேடிட்டுக்கிடந்தன வென்று சபையாரிடம் விண்ணப்பித்தனன். சபையார், ஊர் மஞ்சிக்கத்தினின்று[4] கழனிக் கோலால் அளந்து 1400 குழி சிலாலேகை செய்து தருக, என்று கழனி வாரியத்தார்க்கு உத்தரவு பிறப்பித்தனர்.

1400 குழியும் ஆமாறு

(1) இவ்வூர்ப் பிடாகை[5] ஒச்சேரி வடகழனியிற் செல்லும் மஹாத வாய்க்காலுக்குத் தெற்கேயுள்ள ஊர் மஞ்சிக்கம் 400 குழி; இதன் எல்லை:-கிழக்கு - மாங்காட்டுச் சோமாசி நிலம்; தெற்கு - ஊர் மஞ்சிக்கமாய்க் கிடந்த மேடு; மேற்கு - திருப்பன்றீஸ்வரத்துத் திருமூலட்டானத்துப் பெருமானடிகள் உதமாதம்பட்டி;[6] வடக்கு மஹாத வாய்க்கால்.


  1. இச் சதுர்வேதிமங்கலத்தின் வடபகுதியிலுள்ளவர் போலும்; வீரநாராயணன் என்பது முதற் பராந்தகனது சிறப்புப் பெயர்களுள் ஒன்று.
  2. தானம் - கோயில் உரிமை.
  3. ஆறு - பாலாறு.
  4. மஞ்சிக்கம் - புரம்போக்கு; தரிசுநிலம்.
  5. பிடாகை - ஊருடன் சேர்ந்திருக்கும் சிற்றுார்; உட் கிடையூர்.
  6. உதமாதம்பட்டி - நிலத்தின் பெயர்.