பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

குடத்தில் இடுவர். இவ்வாறு முப்பது பகுதியினரும் இட்ட பின்னர், அம்முதியார், அங்கு நடைபெறுவது இன்னதென்றறியாத ஒரு சிறுவனக்கொண்டு, அக்குடத்தினின்று ஒரு ஓலைக் கட்டினை எடுப்பித்து, அதனை அவிழ்த்துப் பிறிதொரு குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் ஒரு ஓலையை அவனைக்கொண்டு எடுக்கச்செய்து அதனைத் தாம் வாங்கி, அங்கிருக்கும் கரணத்தான் கையில் கொடுப்பர். அவன் தன் ஐந்து விரல்களையும் அகலவிரித்து அகங்கையில் அதனை ஏற்று அதன்கண் எழுதப்பெற்றுள்ள பெயரை யாவரும் அறிய வாசிப்பன். அங்கிருந்த நம்பிமார் அனைவரும் அவ்வோலையைப் படித்திடுவர். அதன் பின்னர் அப்பெயர் ஒரு ஒலையின் கண் எழுதிக்கொள்ளப்படும். இவ்வாறு மற்றைய கட்டுக்களையும் ஒன்றன்பின் ஒன்றாக முன்போல் எடுப்பித்துப் பிரித்துக் குடத்திட்டுக் குலுக்கி, முன்னையிற்போல ஒவ்வொரு ஓலையாக எடுக்கச்செய்து எழுதிக்கொள்வார்கள். இவ்வண்ணம் எழுதிய முப்பதின்மருள் கல்வியின் முதிர்ந்து வயதின் மூத்தார் பன்னிருவரைச் சம்வத்சர வாரியர் எனத் தேர்ந்திடுவர். மற்றைய பதினெண்மருள் பன்னிருவர் தோட்டவாரியராகவும், அறுவர் ஏரிவாரியராகவும் தேர்ந்திடப்பெறுவர். பின்னரும் இம் முறையே முப்பது ஓலைகளைத் தேர்ந்து குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் பன்னிரண்டினை எடுப்பித்து, அறுவரைப் பொன் வாரியராகவும், அறுவரைப் பஞ்சவாரியராகவும் ஏற்படுத்துவார்கள் ”.[1]


  1. முதல் இராசசாசசோழன் - உலநாத பிள்ளை - பக்கம் 53 – 53.