பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

அமுது செய்யவும், மூன்று சந்தியும் ஒரு விளக்கு எரிக்கவும் ஏற்பாடு செய்யப்பெற்றது.[1]

சில சொற்றாெடர்களும் வழக்காறுகளும்

மஞ்சிக்கம் என்பது ஊர்களில் இருக்கும் புறம்போக்கு நிலம். இது ஊர்ச்சபையாரின் மேற்பார்வையில் இருக்கும்; இந்நிலப்பகுதியை இங்ஙனம் சாசனம் செய்து கொடுக்கும் உரிமை ஊர்ச்சபையார்க்கிருந்தது. இம்மஞ்சிக்கம் வரி செலுத்தாது கிடந்த பூமி என்பது ”ஊர் மஞ்சிக்கமாய் வரிசிலத்துக் கிடந்த பூமி” என்ற பகுதியால் அறியலாம். ’வரி சிலத்துக்கிடந்த’, ’வரிசிரையாய்க் கிடந்த’ என்ற பகுதிகள் ’’வரி செலுத்தாதிருந்த’’ என்ற பொருளைத் தருவனவாம். இனி உத்தரவுகள் பிறப்பிப்பது சபையாரது உரிமை என்றும், வயல்களைப்பற்றிய உத்தரவுகளை நிறைவேற்றுவது கழனி வாரியப் பெரு பெருமக்களது கடமை என்றும் இக்கல்லெழுத்தினின்று அறிகிறோம்.

’’குறி’’ என்ற சொல் சபை என்று பொருள்படும். ஊராள்கின்றவன், கண்காணி, மத்யஸ்தன் கணக்கன் என்ற அலுவலர்கள் பெயர்களும் அறியப் பெறுகின்றன. கண்காணி என்பது மேற்பார்வை செய்பவர் (overseer) என்று பொருள்படும். மத்யஸ்தன் என்பவர் கரணத்தான் என்றும் கூறப்பெறுவர்; வாரியப் பெருமக்கள் அல்லது ஊர்ச் சபையினர் பணித்தவற்றைச் செய்வது இவர் கடமை. இக்கல்லெழுத்திலிருந்து ஊராட்சிமுறை அக்காலத்துச் சிறந்திருந்தமை அறிந்து மகிழ்வோமாக !


  1. 962 of 19O4; S. I. I. III 156.