பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

கள் என்று சிறப்பிக்கப் பெற்ற செம்பியன் மாதேவியார் ஆவர். இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் மதுராந்தக தேவரான உத்தம சோழன் என்ற பெயருடையவன் ; கி. பி. 970 முதல் 985 வரை அரசாண்டவன். இவ்வுத்தம சோழனது மகனே மதுராந்தகன் கண்ட ராதித்தன் ஆவான்.

அரசியல் அலுவலன்

முதற் கண்டராதித்தர் கி. பி. 957-ல் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார். அந்நாளில் உத்தம சோழன் சிறு குழந்தையாய் இருந்தான். ஆகவே கண்டராதித்தர் தன் தம்பி அரிஞ்சனை அரசனாக ஆக்கினார். அரிஞ்சயனும் தில திங்களே அரசாண்டு இறந்து போனான். பின்னர் அரிஞ்சயன் மகன் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் என்பான் கி. பி. 957-ல் சோழப் பேரரசனாகி கி. பி. 970 வரை அரசாண்டான். சுந்தர சோழனுக்குப் பின் அவன் மகன் (முதலாம்) இராசராசன் அரசனாக வரவில்லை ; தன் பெரிய பாட்டனாகிய முதலாம் கண்டராதித்தர் புதல்வனும் தனக்குச் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழனுக்கு அரசாளவேண்டும் என்ற விருப்பம் இருந்தமை அறிந்து, உத்தமசோழன் சோனாட்டரசனாக இருக்க விட்டுக்கொடுத்தான். உத்தம சோழனும் கி. பி. 970-985 வரை அரசாண்ட பின்னர், முதலாம் இராசராசசோழன் அரசனான். எனவே உத்தம சோழனுடைய மகனாகிய மதுராந்தகன் கண்டராதித்தனுக்கு அரசுரிமை கிடைக்கவில்லை. முதல் இராசராச சோழனாட்சியில் இவன் கோயில் காரியங்களும் அறநிலையங்களும் நன்கு நடைபெறுமாறு கண்காணிக்கும் அலுவலில் இருந்தான்.