பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சயங்கொண்டசோழப் பிரமாதிராசன்

மணிமங்கலம்

இது செங்கற்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை வட்டத்தில் பல்லாவரத்துக்கு அருகில் இருக்கும் ஓர் ஊர். இவ்வூர் வரலாற்றுச் சிறப்புடையது ; பரமேஸ்வர வர்மனின் கூரம் செப்பேடுகளிலேயும் பல்லவ மல்லனாகிய இரண்டாம் நந்திவர்மன் காலத்திய உதயேந்திரச் செப்பேடுகளிலேயும் குறிக்கப்பட்டுள்ளது. சளுக்கிய அரசனாகிய இரண்டாம் புலிகேசியை முதலாம் நரசிம்மவர்மன் தோல்வியுறச் செய்த போர்க்களங்களுள் இஃதொன்று. இவ்வூரில் மூன்று திருமால் கோட்டங்களும் இரண்டு சிவன் திருக்கோயில்களும் உள்ளன. திருமால் கோயில்கள் ஸ்ரீ இராச கோபாலப் பெருமாள், வைகுண்டப் பெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர்க்கும், சிவபெருமான் கோயில்கள் ஸ்ரீ தர்மேசுவரர், கயிலாச நாதர் ஆகியோர்க்கும் உரியவை. இராச கோபாலப் பெருமாள் கோயிலில் ஏறத்தாழப் பதினான்கு கல்வெட்டுக்கள் உள்ளன. அவையாவும் சோழர் காலத்தவை.

இம் மணிமங்கலம் வட மொழியில் ரத்நாக்ரஹாரா என்றும் ’ரத்நக் கிராமா’ என்றும் குறிக்கப் பெற்றுளது. இராசகேசரி வர்மனுடைய கல்வெட்டில் இவ்வூர் ’லோக மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், முதலாம் இராசாதி ராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களில் ’ராச சூளாமணிச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், முதலாம் குலோத்துங்க-