உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

தந்தை பெயர் சீரிளங்கோ என்றும், திருநறையூர் நாட்டு மண்டலஞ்சேரி என்ற ஊரவன் என்றும், கருணாகரனின் இயற் பெயர் ‘திருவரங்கன்’ என்றும், இவன் ’வண்டுவராஜன்’ என்று கூறப் பெறுவானென்றும், இவன் சத்வைஷ்ணவன் என்றும் அறியலாம்.

மேலும் இக்கல்வெட்டினின்று கருணாகரன் ஆலவேலி என்ற ஊரில் திருமால் கோயில் கட்டினானென்றும், அதற்கு நிலதானம் செய்தானென்றும், திராட்சாராமக் கோயிலுக்குப் பல அறங்கள் செய்தானென்றும் அறிய வருகின்றது.

இவனது சமயம்

திராட்சாராமக் கல்வெட்டில் இவன் சத்வைஷ்ணவன் என்று கூறப்பட்டிருப்பதாலும், ஆலவேலியில் திருமாலுக்குக் கோயிலெடுப்பித்து நிபந்தம் விட்டிருப்பதாலும், இவனது மனைவி காஞ்சிபுரம் திரு அத்தியூ ராழ்வார்க்குத் திருநுந்தா விளக்கு நிபந்தம் அளித்துள்ளமையாலும், இவனது திருமால் பக்தி நன்கு விளங்கும். இவனது பெயர் ஆகிய ’கருணாகரன்’ என்பது, இராமன் திருநாமங்களி லொன்று. கலிங்கத்துப் பரணி யாசிரியரும் இராமப் பெயரோடு இவன் பெயரையும் வைத்து, இணைத்து ஒரு தாழிசையில் பின்வருமாறு கூறியுள்ளார்:—

’’இலங்கை எறிந்த கருணாகரன்றன்
        இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்

கலிங்கம் எறிந்த கருணாகரன்றன்
        களப்போர் பாடத் திறமினோ !’’ (2- 44)

இதனானும் இவன் வைணவச் சார்பினனென்று ஊகித்தறிதல் கூடும்.