பக்கம்:சோழர் வரலாறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

99


பாடின் றெண்கிளைப் பாடுகேட் டஞ்சிப்
போரடு தானைக் கட்டி
பொராஅ தோடிய ஆர்ப்பினும் பெரிதே”[1]

என அகப்பாட்டிற் கூறப்பட்டுள்ளது.

சிறந்த புலவன்: இத்தித்தன் சிறந்த புலவன் என்பது தெரிகிறது. இவன் பாடிய பாட்டொன்று அகநானூற்றில் இருக்கிறது. அஃது இனிமை மிக்க பாடலாகும்.[2]

6. சோழன் நல் உருத்திரன்

புலவன்: இவனது வரலாறு ஒன்றும் தெரிந்திலது. இவன் பாடிய ஒர் அழகிய புறப்பாட்டே இன்று இருப்பது. அதைக் காணின், இவன் விரிந்த உள்ளமுடையாருடன் நட்புச் செய்தலில் மிக்க விருப்பம் உடையவன் என்பதும் செய்யுள் செய்தலில் வல்லவன் என்பதும் தெரிகின்றன. அச்செய்யுளின் பொருள் இதுவாகும்:

“தான் பெற்ற சிறிய கதிரைத் தன் வளையில் வைக்கும் எலிபோலும் சிறு முயற்சியினராகித் தம் செல்வத்தை இறுகப் பிடிக்கும் உள்ள மிகுதி இல்லாதாருடன் பொருந்திய நட்பு எனக்கு இல்லையாகுக; தறுகண்மையுடைய ஆண்பன்றி இடப்பக்கத்தே வீழ்ந்ததாகலின், அதனை உண்ணுதல் இழிவென்று கருதி அன்று அதனை உண்ணாதிருந்து, அடுத்த நாள் மலைக்குகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பெரிய ஆண் யானையை வலப்பக்கத்தே வீழச் செய்து உண்ணும் புலி பசித்தாற்போலும் மெலிவில்லாத உள்ளமுடைய உரவோர் நட்புடன் பொருந்திய நாள்கள் உளவாகுக”[3]

முல்லைக்கலி: இச்சோழ மன்னன் முல்லைக்கலி பாடிய பெரும் புலவன் ஆவன். எனின், இவனது புலமைச் சிறப்பை யாரால் அளவிட்டுரைக்கலாகும்?

  1. அகம்.
  2. அகம்.
  3. புறம், 190.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/101&oldid=1234322" இலிருந்து மீள்விக்கப்பட்டது