பக்கம்:சோழர் வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சோழர் வரலாறு



குறிக்கின்றன. எனவே, பண்டைக்காலத்தில் தொண்டை மண்டலம் அதுவரை பரவி இருந்ததென்றால் தவறாகாது. அந்தப்பகுதி முழுவதும் மலைப்பகுதியாக உள்ளதாலும் சாதவாகனரது தென்பகுதி அங்கு முடிவதாலும் எல்லைப்புறப் போர்கள் அங்கு நிகழ்ந்தனவாதல் வேண்டும். அப்போர்களால் அந்தப் பகுதி வன்மை குறைந்திருந்ததோ என்னவோ, தெரியவில்லை. அங்குக் சென்று சேர பாண்டியர் சோணாட்டு மண்ணாசையால் தாக்கினர் என்று மணிமேகலை கூறுகிறது.[1]

சேர - பாண்டியர் யாவர்? இங்ஙனம் போரிட்ட சேர பாண்டியர் யாவர்? செங்குட்டுவன் பேரரசனாக இருந்த போதிலும் அவனது சேர நாட்டில் ஞாதியர் பலர் பல பகுதிகளை ஆண்டு வந்தனர்; அங்ஙனமே பாண்டி நாட்டில் சிற்றரசர் சிலர் இருந்திருக்கலாம். இன்றேல், கண்ணகியால் கொல்லப்பட்ட பாண்டியற்குப் பின்வந்த பாண்டியனே இப்போரிற் கலந்தவனாகலாம்.

கிள்ளியும் மணிமேகலையும்: கோவலனுக்கும் மாதவிக் கும் பிறந்த மணிமேகலை பெளத்த மந்திர வலியால் வேற்றுருக் கொண்டு புகார் நகரத்து ஏழைகட்கு உணவு படைத்து வந்ததைக் கேள்வியுற்ற நெடுமுடிக்கிள்ளி அவளை அழைப்பித்து உபசரித்தான்; அவள் வேண்டுகோட்படி சிறைச்சாலையை அழித்துத் துய்மை செய்து அவ்விடத்தைப் பல வகையான நற்செயல்களும் நடத்தற்குரிய இடமாகச் செய்வித்தான்.[2]

மணிமேகலையும் உதயகுமரனும்: அரசனது தவப்புதல்வனான உதயகுமரன் மணிமேகலை மீது காதல் கொண்டு அவளைத் தன் வயப்படுத்தப் பலவாறு முயன்றான். அவள்


  1. Dr.S.K. Aiyangar’s ‘Manimekalai in its Historical Setting.’ pp.46-48.
  2. மணிமேகலை, காதை, 19.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/104&oldid=482787" இலிருந்து மீள்விக்கப்பட்டது