பக்கம்:சோழர் வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

சோழர் வரலாறு


 வந்தனர். இக்காவிரியைப் பெண்ணாக உருவகப்படுத்திப் பாடப்பெற்ற காவிரிப்பாக்களைச் சிலப்பதிகாரத்திற் கண்டு மகிழ்க.

நகரங்கள்: பண்டைச் சோழநாட்டின் துறைமுகப் பட்டினமாக இருந்த பெருமை பெற்றது காவிரிப்பூம் பட்டினம். அந்த இடம் மணிமேகலை காலத்திற் கடல் கொண்டது. அந்த இடத்தை உணர்த்த இன்று காவிரிப் பட்டினம் என்ற பெயருடன் அங்கு ஒரு சிற்றுார் இருக்கிறது. அந்த இடத்திற் கிடைத்த கல்வெட்டுகள் அங்குதான் புகார் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன.[1] தவிர, நாகப்பட்டினமும் சிறந்த துறைமுக நகரமாகும். இன்று சிற்றுாராகக் கிடக்கும் உறையூர் பண்டைச் சோழர் கோ நகரங்களில் ஒன்றாகும். குடந்தை அல்லது கும்பகோணம் சோணாட்டுப் பழைய நகரங்களில் ஒன்றாகும்.

சிற்றுார்கள்: சோழ நாட்டில் எண்ணிறந்த சிற்றுார்கள் இருந்தன. பொய்யாதளிக்கும் பொன்னியாற்று வளத்தால் சிற்றுார்கள் நெற்களஞ்சியங்களாக விளங்கின. வயல்களில் அல்லி மலர்கள் பூத்துக் கிடந்தன. அவை கருப்பஞ் சாற்றைக் காய்ச்சும் முயற்சியில் எழுந்த புகையால் வாட்டமுற்றன. எருமை மறையத் தக்க செஞ்சாலிப் பயிர்கள் வயலை அழகு செய்தன. சிற்றுரைச் சுற்றிலும் மா, பலா, வாழை, தென்னை, கமுகு மரங்கள் செழித்து வளர்ந்தன; நிறைந்த பயனைத் தந்தன. அறுவடைக்கு முன் கண்ணைக் கவரத் தக்க அணிகலன்களை அணிந்த மகளிர் வயல்களைக் காவல் புரிந்தனர். நென் மணிகளைத் தின்ன வந்த பறவைகளைத் துரத்தத் தம் அணிகளை வீசி எறிந்தனர். சிறிய பிள்ளைகள் கால்களில் தண்டை ஒசையிட விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.[2]


  1. A.R.E. 1919, Part II No.2
  2. பட்டினப்பாலை, வரி, 128.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/112&oldid=482440" இலிருந்து மீள்விக்கப்பட்டது