பக்கம்:சோழர் வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

சோழர் வரலாறு



அரசு :சோழநாடு பண்டைக்காலத்தில், முன் சொன்னவாறு, பல சிறு பிரிவுகளாக இருந்தது. பிறகு கரிகாலன் போன்ற வீரமன்னர் காலத்தில் ஒர் அரசனிடமே அமைந்திருந்தது. அரசு தந்தைக்குப்பின் மகன் அடைவதென்ற முறையிலேயே நடைபெற்று வந்தது. சில சந்தர்ப்பங்களில் பட்டம் பெறும் இளைஞன் வலியற்றவனாயின், தாயத்தார் அவனைத் துரத்திப் பட்டத்தைப் பெறுதலும் உண்டு. ‘அரசனும் குடிகளும் ஒன்று பட்டுள்ள நாடே நாடு’ என்னும் திருக்குறள் கருத்திற்றான் பண்டை அரசு ஏறத்தாழ நடந்து வந்தது. அரசுக்கு நிலவரி, சுங்கவரி, வென்ற நாட்டுச் செல்வம் என்பனவே செல்வமாக அமைந்திருந்தன. சோழர் கும்பகோணத்தில் அரசு பண்டாரத்தை வைத்திருந்தனர்; அது மிக்க காவலைக் கொண்டிருந்தது.[1]

குழு-ஆயம்-மன்றம்: அரசனுக்கு உதவியாக ஐம்பெருங் குழுவும் எண் பேராயமும் இருந்தன. அமைச்சர், புரோகிதர், தானைத் தலைவர், தூதுவர், சாரணர் என்போர் கொண்ட அவை ஐம்பெருங்குழு எனப்படும். கரணத்தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர் கொண்ட அவை எண்பேராயம் எனப் பெயர் பெறும். இவையன்றி மன்றம் என்பது ஒன்றுண்டு. அங்கு அவை கூடும் என்று திருக்குறளும் பிற நூல்களும் பலபடியாகக் கூறுவதிலிருந்து, ஊரவை அரசியலிற் பங்கு கொண்டதே என்று கருதுதல் தவறாகாது. உறையூர் மன்றத்தில் மலையமான் மக்கள் விசாரிக்கப்பட்டனர்[2] என்பதிலிருந்து, ஊர் மன்றம் என்பது நீதிமன்றப் பணியிலும் ஈடுபட்டிருந்தமை தெளிவாதல் காண்க.‘உறையூர் அரசனான கோப்பெருஞ் சோழன் இறந்தபின், அவன் இருந்த மன்றத்தைப் பார்த்துக் கலங்கினேன்’ என்று பொத்தியார்[3]


  1. அகம், 60.
  2. அகம், 46.
  3. Ibid, 220.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/114&oldid=482443" இலிருந்து மீள்விக்கப்பட்டது