பக்கம்:சோழர் வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

113


 வருந்திக் கூறலை நோக்க, அரசன் மன்றத்தில் இருந்து அரசியல் செய்த அழகு தெரிகிறதன்றோ? அறிஞர் ஊர் அவையை அடையும் பொழுது, தங்கள் பகைமையையும் பூசலையும் மறந்து, பொதுப்பணி செய்வதற்கு உரிய உள்ளத்தோடு இருப்பர் என்று பொருள்படத்தக்கவாறு பொருநர் ஆற்றுப்படை வரிகள் இருத்தல் காண்க.[1] அரசன், ஐம்பெருங்குழு, எண்பேராயம், ஊர் அவை இம்மூன்று குழுவினரையும் கலந்தே அரசியல் நடத்தி வந்தான் எனக் கோடலில் தவறில்லை. இத்தகைய அரசியல் அவை, கற்றார் அவைகளைப் பற்றியே வள்ளுவனார் வற்புறுத்திப் பாடியுள்ளார் என்பது ஈண்டு அறியத்தக்கது. ஊர்தோறும் தீயோர் தீமைகண்டு ஒறுப்பதற்குரிய வீறுசால் அவைகள் பண்டைத் தமிழகத்திலிருந்து முறை செய்தன.[2]

ஊர் மன்றம்: சிற்றுார்களிலும் சங்க காலத்தில் மன்றம் இருந்தது. ஊரின் பொதுச் செயல்களை ஆய்ந்து முடிபு கூற ஊரார் கூடிய இடமே மன்றம் எனப்பட்டது. அக்கூட்டம் பெரிய மரநிழலிற் கூடும்.அப்பொது இடத்தில் ஊரைப்பற்றிய செயல்களுடன், கூத்து முதலியனவும் நடைபெறல் வழக்கம். பெண்கள் நடிப்பர்.இவ்வூரவைச்செயல்கள் போர்க்காலத்தில் நிறுத்தப்பட்டு வந்தன.[3] இவ்வூர் அவைகள் இன்னின்ன செயல்களைச் செய்தன என்று திட்டமாக அதற்கு உரிய விவரங்கள் இன்று கிடைக்கவில்லை. ஆயினும், கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் தொண்டை நாட்டை ஆளத் தொடங்கிய பல்லவர் பட்டயங்களில் இவ்வூரவைகள் இருந்தன என்பது குறிக்கப்பட்டிருத்தலால், இவை பெரும்பாலும் ஊராண்மை நடத்தி வந்தன என்று கோடல் தவறாகாது. ஊரவையார் குடவோலை முறையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதும் இங்கு அறியத்தகும்.


  1. வரி. 187-188.
  2. Agam, S. 256; R. Raghava Iyengar's ‘Tamil Varalaru’, pp. 119-120.
  3. Puram, 373 மென்றோள் மகளிர் மன்றம் பேனார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/115&oldid=482449" இலிருந்து மீள்விக்கப்பட்டது