பக்கம்:சோழர் வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

சோழர் வரலாறு


 வழங்கினான். அவன் ‘மும்முடி வேந்தன்’ என வழங்கப்பட்டான். யானைகள் கொடிகளை ஏந்திச் செல்லும் வீரர்கள் தலையிற் பூச்சூடி மார்பில் மாலை சூடி இருப்பர். புறப்புண்படின், அவர் வீடு மீளார். வீரர் இறந்துகிடப்பின், அவ்விடத்தில் அவர் மனைவியர் வந்து ஆகந்தழுவி உவகைக் கண்ணிர் விட்டு உடன் இறப்பர்; சிலர் கைம்மை நோன்பு நோற்பர். புண்பட்டுத் திரும்பிய வீரர்க்குப் பெண்டிர் பெருஞ்சிறப்புச் செய்வர். வென்ற அரசன் தோற்ற அரசனது நாட்டைக் கொள்ளையடித்தலும் உண்டு; அந்த அரசன் செல்வத்தைக் கவர்ந்து வந்து புலவர், பாணர், வீரர், விறலியர், கூத்தர் முதலியோர்க்குக் கொடுத்து மகிழ்வன். இச்செய்திகள் அனைத்தையும் புறநானூற்றுப் பாக்களிற் கண்டு தெளியலாம்.

பெருநிலக் கிழவரும் அரசமரபினரும் கரிகள் மீது இவர்ந்து சென்றனர். தானைத் தலைவர்கள் தேர்களிற் சென்றனர்.

சில வேளைகளில் அரசர் போருக்கு முன் வஞ்சினம் கூறிச்செல்லல் மரபு. சோழன் நலங்கிள்ளி என்பான் போருக்குப் புறப்பட்ட பொழுது கூறியதாவது: “பகைவர் மெல்ல என்னிடம் வந்து ‘எமக்கு ஈயவேண்டும்’ என்று இரப்பாராயின், பழைமையாகிய எனது அரசாட்சி தருதல் எளிது; இனிய உயிரையும் கொடுப்பேன் அமைச்சர், படைத் தலைவர் முதலியோரது வலியுடைமை எண்ணாது என் உள்ளத்தை இகழ்ந்த அறிவற்றவன், யாவரும் அறியும்படி துயிலும் புலியை இடறின குருடன் போலப் பிழைத்தும் போதல் அரிதாகும். அப்பகைவனை யான் வெல்லாவிடின், பொதுப் பெண்டிரது பொருந்தாத சேர்க்கையில் எனது மாலை துவள்வதாகுக’![1] என்பது. இப்பாடலால், சோழன் நலங்கிள்ளியின் அறவுணர்ச்சியும் ஒழுக்க மேம்பாடும் வீரவுணர்ச்சியும் நன்கறியலாம் அன்றோ?


  1. புறம், 73.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/120&oldid=482457" இலிருந்து மீள்விக்கப்பட்டது