பக்கம்:சோழர் வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

121


 பொன் பரிசில் பெற்றார் என்று சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியிற் பாடியுள்ளார். பதிற்றுப் பத்தைப் பாடிய புலவர் பலர் உயர்தரப் பரிசுகளும் ஊர்களும் பெற்றனர். இக்கூற்றுகளில் பாதியளவேனும் உண்மை இருத்தல் கூடும். இங்ஙனம் பண்டை அரசர், புலவரைப் போற்றினமையாற்றான் பல நூல்கள் வெளிவந்தன. நமது பேறின்மை காரணமாகப் பல இக்காலத்து இல்லா தொழிந்தன. பரிசில் பெற்ற புலவன் மற்றொரு புலவனைத் தன் வள்ளலிடத்தே ஆற்றுப்படுத்தும் முறை அழகியது. கூத்தன் வேறொரு கூத்தனைத் தன் புரவலன் பால் ஆற்றுப்படுத்தல், பொருநன் வேறொரு பொருநனைத் தன் அரசனிடம் ஆற்றுப்படுத்தல், பாணன் மற்றொரு பாணனை இங்ஙணம் ஆற்றுப் படுத்தல் முதலியன பத்துப்பாட்டு எனும் நூலில் கண்டு களிக்கலாம். அரசன் எல்லார்க்கும் பேருதவி புரிந்து வந்தமையின் புலவர்க்குள்ளும் பாணர்க்குள்ளும் ஒற்றுமை நிலவி இருந்தது. ஒரு புலவன் மற்றொரு புலவனை மனமாரப் புகழ்ந்து பாடியிருத்தலை அப்பாக்களில் காணலாம்.இங்ஙனம் அரசர்பால் தண்ணளியும் புலவர்பால் ஒற்றுமையும் இருந்தமையாற்றான், அக்காலத்தில் முத்தமிழும் செழித்தோங்கின. தமிழர் தருக்குடன் வாழ்ந்தனர். இந்தியாவின் பெரும் பகுதியைப் பிடித்தாண்ட பிந்து சாரனிடம் தமிழகம் அடிமைப்படாதிருந்தது!

இசையும் கூத்தும்: இவற்றின் விரிவைச் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் விளக்கமாகக் காணலாம். அக்காதைக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய விளக்கவுரையே ஊன்றிப் படித்தற்குரியது. ஏறக்குறையக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டினரான அவர் கி.பி.2ஆம் நூற்றாண்டு நூலாகிய சிலப்பதிகாரத்திற்கு, உரை எழுதினர். அவர் காலத்தில் பலவகைக் கூத்து நூல்களும் இசை நூல்களும் இருந்திராவிடில், அவர் உரை வரைந்திருத்தல் இயலாதன்றோ? அந்நூல்கள் இருந்தமைகொண்டே சங்க காலத்து இசை நாடக மேம்பாட்டை நாம் நன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/123&oldid=482466" இலிருந்து மீள்விக்கப்பட்டது