பக்கம்:சோழர் வரலாறு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

சோழர் வரலாறு



அறையுள்ளே சுதையால் இயன்ற சிலைகள் சுவர்கள் மீது கடவுளர் ஒவியங்கள், சில உள்ளறைகளில் கற்சிலைகள் இருக்கின்றன. கூரை மீது கலசம் கொண்ட கோவில்கள் பல. சில இடங்களில் மூன்று கலசங்கள் இருக்கின்றன. இத்தகைய பழைய கோவில்கள் பிற இடங்களில் காண்டல் அருமை.

ஏறக்குறைய இவற்றைப் போலவே பழைய சங்ககாலக் கோவில்கள் பல இருந்திருக்கலாம் என்றெண்ணுதல் தவறாகாது. சில கோவில்களில் சிலை இல்லை; சுவர் மீது கடவுள் உருவம் திட்டப்பட்டுள்ளது. அதற்கு வழிபாடு நடந்து வருகிறது. இங்ஙனமே தாண்களிலும் கடவுளர் உருவங்கள் காண்கின்றன. இவற்றை நோக்கிய பொழுது எனக்குக் கந்திற்பாவை நினைவிற்கு வந்தது.

காவிரிக்கு வலப்புறம்: காவிரிக்கு அப்பால் மேடான இடம் பரந்து கிடக்கிறது. அதுவே பழைய பூம்புகார் நகரத்தின் சிறந்த பகுதி என்று அங்குள்ளார் கூறுகின்றனர். அம்மேட்டின் மீது பரதவர் குடில்கள் அமைத்து வாழ்கின்றனர். அவ்வழி வந்த அம்மை ஒருத்தியைக் கண்டு அங்குத் தோண்டிப் பார்த்தீர்களா?' என்று கேட்டேன். அவ்வம்மை, ‘அங்கு அகழ்ந்தது இல்லை’ என்று விடையிறுத்தாள். நான் திடுக்கிட்டேன். ஏன்?

“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

என்ற குறள் நினைவிற்கு வந்தது.இக்காலத்தில் பண்டிதரும் பயன்படுத்தாத அகழ்தல் என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கல்வி அறிவற்ற ஓர் அம்மை எளிமையாக உச்சரித்தாள் என்பது வியப்பே அன்றோ? பூம்புகார் அழிந்தாலும் பூம்புகார்க் காலத்துத் தமிழ்ச் சொல் அழியவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன். சங்க முகத்துறையில் தமிழ் உணர்ச்சியுடையார் நிற்பின், சங்ககால நினைவு எழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/130&oldid=482486" இலிருந்து மீள்விக்கப்பட்டது