பக்கம்:சோழர் வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

சோழர் வரலாறு



இருப்பது பல்லவன் ஈச்சரம் என்னும் திருக்கோவில் ஆகும். இதுவும் பாடல் பெற்றது.கி.பி.650-லேயே இஃது இப்பெயர் பெற்றதெனின், அதற்கு முந்தியே இக்கோவில் பல்லவ அரசன் ஒருவனால் கட்டப் பெற்றதாகவோ - வழிபாடு செய்யப் பெற்றதாகவோ இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது அன்றோ? எனவே, இக்கோவில் கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய கோவிலாகும் என்பதில் ஐயமில்லை; மூல லிங்கம் பட்டை இட்டதன்று. கோவில் நகரத்தாராற் புதுப்பிக்கப் பட்டதாகும். திருச்சுற்றில் உள்ள பிள்ளையார் கோவில் துரபி துரங்கும் சிங்கம் வடிவில் அமைந்துள்ள அழகு பார்க்கத்தக்கது.

பூம்புகாரின் பிற்சிறப்பு: இக்கோவில் ‘பல்லவன் ஈச்சரம்’ எனப் பெயர் பெற்றமையாலும், பெரிய பல்லவ வேந்தனாகிய மஹேந்திரன் காலத்தில் இஃது இருந்தமை யாலும், அவனுக்கும் முற்பட்ட காலத்திலே இஃது இயன்றதாதல் வேண்டும். அஃதாவது இடைப் பட்ட பல்லவர் காலத்திலேனும் (கி.பி. 350-600) கட்டப் பெற்றதாதல் வேண்டும். அங்ஙனமாயின், அக்காலத்தே காவிரிப்பூம் பட்டினம் தன் பழம் பெருமையுடன் இருந்திருத்தல் வேண்டும் என்பது தானே பெறப்படுகின்ற தன்றோ? என்னை? கி.பி. 450-இல் வாழ்ந்த புத்ததத்தர் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பித்திருத்தலாலும், இயற்பகை நாயனார் காலத்தில் பூம்புகார் சிறப்பாக இருந்திருத்தலாலும், தேவார காலத்திலும் மாடமாளிகைகள் இருந்தன என்று சம்பந்தர் கூறலாலும் என்க. எனவே, இடைக்காலப் பல்லவர் காலத்திலும் பிற்காலப் பல்லவர் காலத்திலும், ஏறத்தாழக் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முடியவேனும் பூம்புகார் சிறப்புற்ற நகரமாகவும் துறைமுகமாகவும் இருந்திருக்கலாம் என்று கோடலில் தவறில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/132&oldid=482488" இலிருந்து மீள்விக்கப்பட்டது