பக்கம்:சோழர் வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

133



மேல் கரை நாட்டிலிருந்து கொண்டு சென்றவர் தமிழரே. ஆவர். அவர்கள் அக்காலத்தில் திரை கடல் ஓடி வாணிகம் செய்தனர்.[1] இத்தகைய செழுமையான வாணிகம் அலெக்சாண்ட்ரியப் படுகொலை நிகழ்ச்சிவரை செம்மையாக நடைபெற்று வந்தது.

இங்ஙணம் நடைபெற்று வந்த வாணிகத்திற் கீழ்க்கரை ஒரமாக நடந்த பகுதியில் பெரும் பங்கு கொண்டவர் சோழரே யாவர். சோழ நாட்டுத் துறைமுகங்களில் கடலோரமே செல்லத்தக்க கப்பல்கள் பல இருந்தன. ‘சங்கரா’ என்னும் பெயர் கொண்ட பெரிய கப்பல்களும் இருந்தன. கங்கை முதலிய இடங்களுக்குச் சென்ற கப்பல்கள் ‘சோழந்தி’ எனப் பெயர் பெற்றன.[1] இக்குறிப்பால் சோழரிடம் கடலோரமே செல்லத்தக்க சிறிய கப்பல்களும், பெரிய கப்பல்களும் கடல் கடந்து செல்லத்தக்க பெரிய கப்பல்களும் இருந்தன என்பது நன்கு விளங்குகிறதன்றோ? இக்கப்பல்கள் இருந்தமை பட்டினப்பாலையாலும் மணிமேகலையாலும் (இலக்கிய வகையாலும்) நாம் நன்குணரலாம்.[2] இங்ஙணம் பெருத்த கடல் வாணிகம் கிழக்கிலும் தெற்கிலும் செய்து வந்த தமிழ் மக்கள் இந்து - சீனம், சுமத்ரா, ஜாவா முதலிய இடங்களில் வாணிகத்தின் பொருட்டுக் குடியேறியிருந்தனர் என்பதில் ஐயமுண்டோ? இதைத்தான் அறிஞர் ஆதரித்து விளங்க வரைந்துள்ளார்.[3]

பண்டங்கள் சில: பூம்புகாரில் விற்பனைக்கு இருந்த பொருட்களுட் சில அடியார்க்கு நல்லாரால் ஊர்காண் காதை உரையிற் குறிக்கப் பெற்றன. அவை அறிதலால் அக்கால வாணிகச்சிறப்பையும் அவ்வாணிகம் செய்த தமிழ் மக்களது ஒப்புயர்வற்ற நாகரிகத்தையும் நன்குணரலாம்.


  1. 1.0 1.1 Periplus, Sec. 60 and Schoff’s, notes.
  2. பட்டினப்பாலை, வரி 29-32; மணிமேகலை, காதை வரி 29-34.
  3. ‘Periplus’, p. 261.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/135&oldid=482494" இலிருந்து மீள்விக்கப்பட்டது