பக்கம்:சோழர் வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

சோழர் வரலாறு



ருக்கும் திணைக்குரிய தெய்வங்களே பேசப்பட்டிருக்கும். பிற்காலப் பாக்களில் வடவர் வருகையால் ருத்ர வழிபாடு ஏற்பட்ட காலத்தில் பல கதைகள் புகுந்தன. அக்கதைகள் அனைத்தும் பிற்காலப் பாக்களில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. சிவன் முப்புரம் எரித்தமை, சகரர் கடலைத் தோண்டியது; இராமாயணக் கதைகள், மகாபாரதக் கதைகள் இன்னோரன்ன பிற வடநாட்டுக் கதைகள், சிலப்பதிகாரம். மணிமேகலை என்னும் கடைச்சங்கத்து இறுதிக்கால நூல்களில் பாகவத புராணச் செய்திகள், விசுவாமித்திரன் நாய் இறைச்சியை உண்டது. அகல்யை வரலாறு. வாமன அவதாரக் கதை இன்ன பிறவும் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன.

வடமொழியாளர் சங்க காலத்தில் நன்கு நிலைத்து விட்டனர் என்பதைப் பலவிடத்தும் குறித்தோம். அவர்கள் சிறந்த கல்வி, கேள்விகளில் வல்லுனராக இருந்தனர். நான்கு வேதங்களிலும் அவை தொடர்பான பிற நூல்களிலும் புலமை பெற்றிருந்தனர். அவர்கள் பழக்கத்தால் சங்க காலத்துச் சோழ மன்னருட் சிலர் வேத வேள்விகளைச் செய்தனர் என்பது தெரிகிறது. பெருநற்கிள்ளி என்பவன் இராஞ்சூயம் (இராஜசூய யாகம்) செய்தவன். அதனால் இவன் வடநூற் கொள்கைப்படி பேரரசன் என்பது பெறப்படுகிறது. இத்தகைய அரசர்கள் அந்நான்மறையாளர்க்குச் சில ஊர்களை மானியமாக விட்டிருந்தனர் போலும்! அவருள் ஒருவன் சோணாட்டு பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயன் என்பவன். இவன் கெளண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவன் ஓதல், ஒதுவித்தல் முதலிய ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்க’த்திலும் சிறந்தவன்; சிறந்த கொடையாளி. தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித்தான். இவனை ஆவூர் மூலங்கிழார் என்னும் நல்லிசைப் புலவர் பாராட்டிப் பாடியுள்ளார். அப்பாடலில் வேள்வியைப் பற்றிய பல விவரங்கள் தெரிகின்றன. இக்குறிப்பால் வேத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/138&oldid=482497" இலிருந்து மீள்விக்கப்பட்டது