பக்கம்:சோழர் வரலாறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

சோழர் வரலாறு


 வர்த்தமானர்க்கும் புத்த தேவர்க்கும் கோவில்கள் இருந்தன. நாடு முழுதும் கிராம தேவதைகட்கும் வீரர்க்கும் பிறர்க்கும் சிறிய கோவில்கள் இருந்தன. இவை யாவும் செங்கல், மண், மரம், உலோகம் இவற்றால் ஆன கோவில்களே ஆகும்.

இடுதல், சுடுதல் முதலியன: இறந்தவர் உடலை எரித்தல் உண்டு; புதைத்தல் உண்டு; தாழியிற் கவித்தல் உண்டு. தாழியிற் கவித்தலே மிகப் பழைய வழக்கம். இடுதல், சுடுதல் என்பன பிற்பட்டவை. இவை பிற்பட்டவை ஆயினும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் பழக்கமே ஆகும். இறந்தவர் உடலை அடக்கம் செய்த இடத்தில் சிறு கோவில்கள் எழுப்புதல் மரபு. “குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன” இறந்தார் கோவில்கள் புகாரில் இருந்தன என்று மணிமேகலை கூறுதல் காணலாம். பத்தினிப் பெண்டிர் கணவருடன் இறத்தல் மரபு. அப்பெண்டிர்க்கும் கோவில்கள் எழுப்புதல் மரபாக இருந்தது. மனைவியர் கணவருடன் இறத்தல் தொன்று தொட்டு இருந்து வரும் தமிழ்நாட்டுப் பழக்கமாகும். ‘அங்கனம் இறவாதவர் தீக்குளிப்பர்; அதுவும் ஆற்றாதவர் மறுபிறப்பில் அக்கணவனைக் கூடற்குரிய முறையில் கைம்மை நோன்பு நோற்பர்” என்று மணிமேகலையில் மாதவி கூற்றாக வருதல் நோக்கத் தக்கது.

சோழர் பேரறிவு: சோழ அரசர் குறிப்பிட்ட நாள்களில் பல சமயத்தவரையும் அழைத்துத் தத்தமது சமயத்தைப் பற்றி விளக்கச் சந்தர்ப்பம் அளித்து அவற்றைப் பொது மக்கள் கேட்க வசதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாம். இதனை மணிமேகலை இந்திரவிழவூரெடுத்த காதையிற் காணலாம். சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காஞ்சியிலும் பல சமயப் பெருமக்கள் இருந்தனர். ஒவ்வொரு தலைநகரத்திலும் இக்காட்சியைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/140&oldid=482499" இலிருந்து மீள்விக்கப்பட்டது