பக்கம்:சோழர் வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

141


 சோணாட்டுடன் நின்று விடாது, பாண்டிய நாட்டிலும் புகுந்து பாண்டியனை ஒடச் செய்தனர். இங்ஙனம் சோழ பாண்டியர் தம் அரசிழந்தகாலம் ஏறத்தாழக் கி.பி. 350-450 எனக் கொள்ளலாம். இங்ஙனம் முடியிழந்த பாண்டிய நாடு, ஏறத்தாழ கி.மு. 590-இல் பாண்டிய அரசனான கடுங்கோனால் நிலைபெற்றது. அதுமுதல் வன்மைமிக்க பாண்டிய மன்னர் பல்லவப் பேரரசரையே எதிர்க்கத் தக்க பேராற்றல் பெற்றனர். ஆதலின், களப்பிரர் வன்மை குன்றிப் பாண்டியரிடம் சிற்றரசராயினர்.

சோணாட்டில் இருந்த களப்பிரர் ஏறத்தாழக் கி.பி. 575 வரை பேரரசராக இருந்தனர்; பின்னர் சிம்மவிஷ்ணு என்ற பல்லவனால் முற்றிலும் முறியடிக்கப்பட்டனர்; சோழ அரசை இழந்தனர்; தஞ்சை, வல்லம், செந்தலை, புதுக்கோட்டை முதலிய இடங்களில் சிற்றரசர் ஆயினர். வலுத்தவர் பக்கம் சேர்ந்து காலத்திற்கு ஏற்றாற்போல நடந்து வந்தனர்.

களப்பிரர் ஆட்சியினின்றும் பாண்டியர் விடுதலை பெற்றாற்போலச் சோழர் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் விடுதலை பெறக்கூடவில்லை. ஏன் எனில், அக்களப்பிரரினும் வன்மை மிக்க பல்லவர் களப்பிரரை அடக்கி நாட்டைக் கவர்ந்து கொண்டமையின் என்க. இங்ஙனம் நாட்டைக் கவர்ந்த பல்லவர் கி.பி. 875 வரை சோழ நாட்டை விட்டிலர். ஆதலின், சோழர் ஏறத்தாழக் கி.பி. 350 முதல் முடி இழந்து வாழ வேண்டியவர் ஆயினர் என்பது கவனித்தற்கு உரியது.[1] இனி, இந்த இருண்டகாலத்தில் சோழரைப் பற்றிய செய்திகள் குறிக்கும் சான்றுகளைக் காண்போம்.

புத்ததத்தா: இவர் ஒரு பெளத்த சமயப் பெரியார். இவர் 'அபிதர்மாவதாரம்’ என்னும் நூலைச் சோழநாட்டில் இருந்து எழுதியவர். இவர், “காவிரிப்பூம்பட்டினம் செல்வ வணிகரைக் கொண்டது; மாட

  1. Vide the Author's History of the Pallavas' chap 4.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/143&oldid=480693" இலிருந்து மீள்விக்கப்பட்டது