பக்கம்:சோழர் வரலாறு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

சோழர் வரலாறு



மாளிகைகள் நிரம்பியது; இனிய பல பூஞ்சோலைகளை உடையது; அரண்மனைகளை உடையது; கண்டதாசன் கட்டிய புத்த விஹாரத்தில் நான் இருந்து, என் மாணவி சுமதியின் வேண்டுகோளால் இந்நூலை எழுதினேன்[1]” என்று மேற்சொன்ன தமது நூலின் ஈற்றிற் குறித்துள்ளார். அவரே தமது ‘விநயவிநிச்சியம்' என்னும் நூலின் இறுதியில், “இந்நூல் புத்த சீடர்களால் வரையப்பட்டது. நான் சோணாட்டில் உள்ள பூதமங்கலத்தில்[2] வேணுதாச விஹாரத்தில் தங்கி இருந்தபொழுது இதனை எழுதினேன். அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர மரபரசன் உலகத்தை ஆண்ட பொழுது இந்நூலைத் தொடங்கி எழுதி முடித்தேன்[3]” என்று கூறியுள்ளார். இவர் காலம் ஏறத்தாழக் கி.பி. 450 ஆகும்.[4]

களப்பிரரும் பெளத்தரும்: அச்சுதன் என்னும் களப்பிர அரசன் மூவேந்தரையும் விலங்கிட்டு வைத்ததாக 'தமிழ் நாவலர் சரிதை’ கூறுகின்றது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டினரான அமிதசாகரர் என்னும் பெளத்தர் இந்த அச்சதனைப்பற்றிய சில பாக்களைக் குறித்துள்ளார். இக்குறிப்பாலும், புத்த தத்தர் இவனைக் குறித்திருப்பதாலும் இவன் பெளத்தனாக இருந்திருக்கலாம் எனக் கோடலில் தவறில்லை. இவன் ‘உலகத்தை ஆண்டான்’ எனப் புத்ததத்தர் கூறலால், அச்சுதன் சோழ-பாண்டிய நாடுகளை ஆண்டனன் என்று கொள்ளலாம். இவன் காலத்தவரே பெரிய புராணம் கூறும் மூர்த்தி நாயனார்.


  1. K.A.N. Sastry’s cholas’ Vol. I, pp. 120-121.
  2. இப்பூதமங்கலமே பெரியபுராணம் கூறும் போதி மங்கை; சம்பந்தர் புத்தரோடு வாதிட்டு வென்ற இடம்.
  3. K.A.N. Sasiry’s cholas, 1, p. 121.
  4. B.C. Law’s History of Pali Literature, vol.2. pp. 984, 385&389. புத்ததத்தர் வரைந்த நூல்களிற் காணப்படும் குறிப்புகளைப்பற்றி J.O.R. Vol. 2. பார்க்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/144&oldid=1234333" இலிருந்து மீள்விக்கப்பட்டது