பக்கம்:சோழர் வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

சோழர் வரலாறு



இடைக்காலமே புகழ்ச் சோழர் வாழ்ந்த காலம் எனக்கோடல் பொருத்தமே ஆகும்[1]. அச்சுதன் போன்ற களப்பிரப் பேரரசனும் கோச்செங்கணான், புகழ்ச்சோழர் போன்ற சோழப் பேரரசரும் கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தமையாற் போலும் பல்லவர் சோழநாட்டைக் கைப்பற்றக் கூடவில்லை!

கோச்செங்கணான், புகழ்ச்சோழர், களப்பிர அரசர்களாகிய கூற்றுவ நாயனார்[2] (அச்சுத விக்கந்தன்?) இவர்களை இவ்விடைப்பட்ட காலத்தவராகக் (சுமார் கி.பி.450-550) கொள்ளின், தென் இந்திய வரலாற்றில் இருண்டபாகம் எனப்பட்ட காலத்தின் ஒருபகுதி வெளிச்சமாயிற்றெனக் கொள்ளலாம். 'இவ்விருண்ட காலம்-பல்லவர் காஞ்சியைத் துறந்து தெலுங்கு நாட்டில் வாழ்ந்த காலம்- சோழர் இடையீட்டுக் காலமாக இருத்தல் வேண்டும்' என்று வெங்கையா போன்ற கல்வெட்டறிஞர் கொண்ட கருத்தில்[3] பேரளவு உண்மையுண்டு என்பதும் இதனால் உறுதிப்படும்.

கி.பி. 600 முதல் 850 வரை: (1) ‘பல்லவன் சிம்ம விஷ்ணு (கி.பி. 575-615) காவிரி பாயப் பெற்ற வளமிக்க சோழநாட்டைக் கைப்பற்றினான். அவன் இம்முயற்சியில் தன்னை எதிர்த்த களப்பிரர், சோழர், பாண்டியர் முதலிய தென்னாட்டரசரை வென்றான்’ என்று வேலூர் பாளையச் செப்பேடுகள் செப்புகின்றன[4].

(2) சோழரை வென்றதாகச் சாளுக்கியர் பட்டயம் கூறுகிறது. இவர்கள் ரேனாண்டுச் சோழராக இருத்தல் வேண்டும்[5]

(3) சிம்மவிஷ்ணு மகனான மஹேந்திரவர்மன் சோணாட்டின் பேரழகைக் கண்டுகளிக்கச் சிவனார்க்குத் திருச்சிராப்பள்ளி மலைமீது குகைக்கோவில் அமைத்ததாகக் கல்வெட்டிற் கூறியுள்ளான்.

  1. C.V.N. Aiyar’s origin and Development of Saivism in S. India.’ p.183.
  2. Ibid pp. 180-181.
  3. Ind Ant. 1908. p. 284.
  4. S.H. I. II. p.208.
  5. Ibid pp. 180-181.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/154&oldid=485386" இலிருந்து மீள்விக்கப்பட்டது