உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழர் வரலாறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

சோழர் வரலாறு



அரண்மனையிலிருந்து வெளிவந்தபோது தான் முதல் முதலிற் கண்டதாகத் திவ்விய சூரி சரிதம் கூறுகிறது.

(2) திருமாலை அன்றி வேறு எவரையும் மணக்க இசையாதிருந்த உறையூர் நாச்சியார் 'தரும வருமன்' என்னும் சோழ அரசன் மகளார் ஆவர்.

(3) திருமங்கை என்பது சோழநாட்டின் கண்ணதோர் ஊர். திருமங்கை ஆழ்வார் கள்ளர் மரபினர். அவர் முதலில் சோழன் சேனைத் தலைவராகவே இருந்தனர்.[1]

முடிபு: இதுகாறும் பட்டயங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் என்பவற்றிலிருந்து கூறிவந்த குறிப்பு களால், சோழர் சிற்றரசராக உறையூர், பழையாறை, திருவாரூர் முதலிய இடங்களில் அரண்மனைகளை அமைத்துக் கொண்டிருந்தனர்; சிறந்த சமயத் தொண்டு செய்து வந்தனர்; அமைச்சர், படைத் தலைவர்களைப் பெற்றிருந்தனர்; பாண்டியர்க்குப் பெண் கொடுத்துப் பெண்பெற்று வந்தனர்; இந்த இருண்ட காலத்தில் வலியிழந்து சிற்றரசராக இருந்தும் கோவிற் பணிகளைக் குறைவின்றிச் செய்து வந்தனர் என்பன போன்ற பல செய்திகளை நன்கு அறியலாம் அன்றோ?


2. சோழர் எழுச்சி
விசயாலய சோழன் - ஆதித்த சோழன் (கி.பி. 850 - 970)

திருப்புறம்பியப் போர்: விசயாலய சோழன் கி.பி. 850-இல் உறையூர் அரசு கட்டில் ஏறினான். அவன் தன் முன்னோரைப் போலப் பல்லவர்க்கு அடங்கியவனாகவே இருந்தான். அக்காலத்தில் பல்லவப் பேரரசனான மூன்றாம் நந்திவர்மன் தன் நாட்டைச் சிறிது சிறிதாக வென்று தெள்ளாறுவரை வந்துவிட்ட பாண்டியன் வரகுணனையும் சோழரையும் பிறரையும் தெள்ளாற்றுப்


  1. K.A.N. Sastry's Cholas, “Vol.I.p.121.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/160&oldid=493953" இலிருந்து மீள்விக்கப்பட்டது