பக்கம்:சோழர் வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

159



போரில் முற்றும் முறியடித்தான். இப்போரில் விசயாலயன் அல்லது அவனுக்கு முற்பட்ட சோழ மன்னன் பாண்டியனோடு சேர்ந்திருந்தனன். பிறகு பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் குடமூக்கில் போர் நடந்தது. அப்போரில் முதலாம் வரகுணன் மகனான ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லவன் வெற்றிபெற்றான். பிறகு அரிசிலாற்றங் கரையில் நந்திவர்மன் மகனான நிருபதுங்க பல்லவன் ஸ்ரீமாறன் படைகளை வெற்றி கொண்டான். ஸ்ரீமாறனுக்குப் பின் கி.பி. 862-இல் அவன் மகனான இரண்டாம் வரகுணன் பல்லவர் மீது போர் தொடுத்தான். அப்பொழுது அபராசிதவர்மன் என்னும் பல்லவன், தன் பாட்டனான கங்க அரசன் பிருதிவீபதியோடு வந்து கடும்போர் செய்தான். அப்போரில் விசயாலயன் பல்லவன் பக்கமாக நின்று போரிட்டான். தஞ்சையை ஆண்ட முத்தரையர் (களப்பிரர் மரபினர்) பாண்டியன் பக்கம் நின்று போரிட்டனர். போரில் பிருதிவீபதி தோற்றான்; ஆயினும், பாண்டியன் தோற்றோடினான். அபராசிதன் வெற்றி பெற்றான். அதனால், அவனுடன் சேர்ந்திருந்த விசயாலய சோழன் முத்தரையருடைய தஞ்சையைக் கைப்பற்றிக் கொண்டான். திருப்புறம்பியப் போரில் பெரும் பங்கு கொண்ட விசயாலயன் மகனான ஆதித்த சோழன் சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு உரியவன் ஆனான். திருப்புறம்பியப் போர் ஏறக்குறைய கி.பி. 880-இல் நடந்ததென்னலாம்.[1]

இப்போரின் சிறப்பு: இப்போர் தமிழக வரலாற்றில் பெரிய மாறுதல்களைச் செய்து விட்டது. இப்போரில் தோற்ற பாண்டிய நாடு மீண்டும் உயிர்ச்சி பெற வழி இல்லாது போயிற்று. இதற்கு முன் தெள்ளாறு, அரசிலாறு முதலிய இடங்களில் ஏற்பட்ட படு தோல்விகளும் இத்தோல்வியுடன் ஒன்றுபடப் பாண்டியர் பலரது மதிப்பும் குறைந்தன. இவை ஒன்று சேர்ந்து பாண்டியர்


  1. K.A.N. Sastry’s ‘Pandyan Kingdom,’ pp.76-71.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/161&oldid=1233379" இலிருந்து மீள்விக்கப்பட்டது