பக்கம்:சோழர் வரலாறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

161


 கலாம். இவன் முன்சொன்ன திருப்புறம்பியப் போரினால் மேலுக்கு வந்தவன். இவன் அபராசிதவர்மனைப் போரில் முறியடித்துத் தொண்டை நாட்டைக் கைப்பற்றினான்’ என்று திரு ஆலங்காட்டுப் பட்டயம் பகர்கின்றது. “பெரிய யானைமீது இருந்த அபராசிதவர்மன்மீது ஆதித்தசோழன் பாய்ந்து அவனைக் கொன்றான்; கோதண்டராமன் என்னும் பெயர் பெற்றான்” என்று கன்னியாகுமரிக் கல்வெட்டுக் கூறுகின்றது.[1] இவற்றால், ஆதித்த சோழன் அபராசிதனைத் தருணம் பார்த்து வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. இந்தக் காலம் ஏறக் குறைய கி.பி. 890 எனக் கொள்ளலாம்.

ஆதித்தனும் கங்க அரசனும்: கங்க அரசனான பிருதிவீபதி திருப்புறம்பியப் போரில் ஆதித்தனுடன் இருந்து போரிட்டு இறந்தவன். அவன் மகனான பிருதிவீபதியார் என்பவன் ஆதித்த சோழனது உயர்வை ஒப்புக் கொண்டு நண்பன் ஆனான். அவன் இராசகேசரி ஆதித்த சோழனது 24ஆம் ஆட்சி ஆண்டில் தக்கோலப் பெருமானுக்கு வெள்ளிக் கெண்டி ஒன்றை அளித்ததைக் குறிக்கும் கல்வெட்டில், ஆதித்த சோழன் உயர்வைக் குறித்துள்ளான்.[2]

ஆதித்தனும் பல்லவரும்: ஆதித்தன் மனைவியின் தாயார் ‘காடுபட்டிகள்’ என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. அதனால் சோழ மாதேவி பல்லவர் மரபினர் என்பது நன்கு தெரிகிறது.[3] இடைக்காலப் பல்லவ அரசனான கந்தசிஷ்யன் திருக்கழுக்குன்றத்துக் கடவுளுக்கு அளித்த தேவதானத்தை ஆதித்த சோழன் புதுப்பித்தான்.[4] மூன்றாம் நந்திவர்மன் மனைவியாகிய அடிகள் கண்டன் மாறம்பாவையார் என்பவள் நியமம் கோவிலுக்குச் சில தானங்கள் செய்துள்ளாள்.அவளே அங்குள்ள பிடாரிகோவிலுக்கு ஆதித்தனது 18-ஆம் ஆட்சியாண்டில் தானம் செய்துள்ளாள்.[5]


  1. 675 of 1909
  2. 5 of 1897
  3. 167 of 1894
  4. 161 of 1928
  5. 13 of 1899
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/163&oldid=491130" இலிருந்து மீள்விக்கப்பட்டது