பக்கம்:சோழர் வரலாறு.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
162
சோழர் வரலாறு
 


ஆதித்தனும் கொங்குநாடும்: ஆதித்த சோழன் தஞ்சாவூரில் முடிசூடிக் கொண்டதும் கொங்குநாடு சென்று அதனை வென்றான். அதனைத்தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான்; ‘தழைக்காடு’ என்னும் நகரத்தையும் கைப் பற்றினான்’ என்று ‘கொங்குதேசராசாக்கள்’ என்னும் நூல் நுவல்கிறது, ஆதித்தன் மகனான முதலாம் பராந்தகன் காலத்துப் பட்டயங்கள் கொங்குநாட்டில் காணப்படலாலும், தான் அந்நாட்டை வென்றதாகப் பராந்தகன் தன் பட்டயங்களிற் கூறாமையாலும், ஆதித்தனே கொங்குநாட்டைவென்றனன் என்பது தெரிகிறது. இஃதன்றி,‘ஆதித்தன் காவிரியின் கரை முழுவதும் (சகஸ்யமலை முதல் கடல்வரை) சிவன் கோவில்களைக் கட்டினான்’ என்று அன்பில் பட்டயம் கூறுதலும் இம்முடிவுக்கு அரண் செய்வதாகும்.

ஆதித்தனும் சேரனும்: ஆதித்தன் காலத்துச் சேரவேந்தன் தாணுரவி என்பவன்.அவன் ஆதித்தனுக்கு நண்பன் என்பதற்கு திருநெய்த்தானத்துக் கல்வெட்டு ஒன்று சான்று பகர்கிறது. அதில், ‘சேரனும்,ஆதித்தனும் கடம்ப மாதேவி என்பாள் கணவனான விக்கி அண்ணன் என்பானுக்கு முடி, பல்லக்கு, அரண்மனை, யானை முதலியன கொள்ளும் உரிமை அளித்தனர்’ என்பது கூறப்பட்டுள்ளது; ‘செம்பியன் தமிழவேள்’ என்ற பட்டமும் தரப்பட்டது.[1] இதனால் இவ்வீரன் சோழனும் சேரனும் விரும்பத்தக்க முறையில் ஏதோ வீரச்செயல்கள் செய்தனனாதல் வேண்டும். ஆதித்தன் மகனாக பராந்தகன் சேரன் மகளை மணந்தவன் தாணுரவி என்பவன் கோக்கந்தன் ரவி என்பவன் என்று ஆராய்ச்சி யாளர் கூறுவர். கொங்கு நாட்டைப் பாண்டிய அரசனிட மிருந்து சேரன் படைத் தலைவனான விக்கி அண்ணன் சோழனுக்காகக் கைப்பற்றி இருத்தல் வேண்டும். அதனாற்றான் சோழனும் சேரனும் சேர்ந்து அவனுக்குச் சிறப்புச்செய்தனர் என்பது தெரிகிறது.[2]


  1. S.I.I. vol 3. part 3, 221; 286 of 1911.
  2. K.A.N. Sastry’s ‘Cholas’ Vol, 1.pp. 138-139.