பக்கம்:சோழர் வரலாறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

சோழர் வரலாறு



அங்கு இருப்பது பயனற்றது என்பதை உணர்ந்த இராசசிம்மன், தன் ஆடையாபரணங்களையும் முடியையும் இலங்கையிலே வைத்து விட்டுத் தன் தாய் வானவன்மாதேவி நாடான சேர நாட்டை அடைந்தான்.[1] இதனைத் திருவாலங்காட்டுச் செப்பேட்டுச் செய்தியும் உறுதிப்படுத்துகிறது. பராந்தக சோழன் மதுரையில் முடிசூடிக் கொள்ளவிழைந்தான் பாண்டியனுக்குரிய முடி முதலியன இலங்கையில் இருப்பதை அறிந்தான்; உடனே இலங்கை இறைவற்கு ஆட்போக்கினான். அவன் அவற்றைத் தர இசையவில்லை. அதனால் பராந்தகன் சினங்கொண்டு, பெரும் படையை இலங்கைக்கு அனுப்பினான். இலங்கைப் படையும் சோழன் படையும் கடும்போர் புரிந்தன. போரில் இலங்கைத் தளபதி இறந்தான். உடனே இலங்கை மன்னனான நான்காம் உதயன் (கி.பி. 945-953) ‘ரோகணம்’ என்னும் கடிநகரை அடைந்தான். சோழப்படை அங்குச் சென்றது; ஆனால் நகருக்குள் புகும் வழி அறியாது தத்தளித்தது; அச்சமேற்கொண்டு திரும்பிவிட்டது.

பாணருடன் போர்: பாலாற்றுக்கு வடக்கே புங்கனூரிலிருந்து காளத்தி வரையுள்ள நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆண்டு வந்தவர் பாணர் எனப்பட்டனர். அவர் ஆண்ட நாடு பாணப்பாடி அல்லது பெரும்பாணப் பாடி எனப்படும். அவர்கள் பல்லவர் காலத்தில் அனந்தப்பூர்க்கு அண்மையில் இருந்தவர்கள். சாளுக்கியர் பலம் மிகுதிப்பட்டதால், அவர்கள் தெற்கே வரவேண்டியவர் ஆயினர். இரண்டாம் விசயாதித்தன் பாணப்பாடியைக் கி.பி. 909 வரை ஆண்டான். இவனது பெயரன் இராட்டிர கூட அரசனான மூன்றாம் கிருஷ்ணன் காலத்தவன். இந்த இருவருக்கும் இடையில் இரண்டாம் விக்கிரமாதித்தன், மூன்றாம் விசயாதித்தன் (புகழ்விப்பவர் கண்டன்) என்பவர் ஆண்டனர். கங்க அரசனான இரண்டாம் பிருதிவீபதி பராந்தகன் நண்பன். அவன்


  1. Mahavamsa, chap. 53
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/168&oldid=491139" இலிருந்து மீள்விக்கப்பட்டது