பக்கம்:சோழர் வரலாறு.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
169
 


உள்ளது.இராசாதித்தன் பகைவரைக் கடுமையாகத் தாக்கிப் போர் புரிந்தான். ஆனால், புதிய கங்க அரசனான இரண்டாம் பூதுகன், யானைமீதிருந்த இராசாதித்தன் மீது திடீரெனப் பாய்ந்து கொன்றான்.இதனால் சோழர் சேனை போரில் தோற்றது. மூன்றாம் கிருஷ்ணன் தன் மைத்துனனுக்கு வனவாசி பன்னிராயிரமும் பெள்வோலம் முன்னூறும் தந்து பெருமைப்படுத்தினான்.இப்போரினால் பராந்தகன் தான் வென்ற பாணப்பாடி, தொண்டை நாடு, வைதும்ப நாடு இவற்றை இழந்தான். இந்த இடங்களில் கிருஷ்ணனுடைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இரண்டாம் பூதுகன் சோணாட்டிலும் புகுந்து அல்லல் விளைத்ததாகச் சில பட்டயங்கள் செப்புகின்றன. கிருஷ்ணன் தன்னை, ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட’ என்று கூறிக் கொண்டதாகச் சில பட்டயங்களிலிருந்து தெரிகிறது. பூதுகன் இராமேசுவரத்தில் வெற்றித்துரண் ஒன்றை நாட்டியதாகக் கூறிக் கொண்டான். ஆயின், புதுச் சேரிக்குத் தெற்கே இதுகாறும் பூதுகனுடைய அல்லது கிருஷ்ணனுடைய கல்வெட்டோ- பட்டயமோ கிடைத்தில. இஃது எங்ஙனமாயினும், ஆதித்தனும் பராந்தகனும் அரும்போர் செய்து சேர்த்த பேரரசு துகளாயது என்பதில் ஐயமே இல்லை.[1]

விருதுப் பெயர்கள் : பராந்தகன் பல பெயர்களைக் கொண்டவன். இவன் மதுரையை அழித்தமையால் மது ராந்தகன் எனப்பட்டான், சிங்கள நாட்டை வென்றமை யால் சிங்களாந்தகன் எனப்பட்டான். இவன் முதலில் நடந்த போரில் கிருஷ்ணனை வீரம் காட்டி வென்றமை யால் வீர சோழன் எனப்பட்டான் என்று கன்னியா குமரிக் கல்வெட்டு கூறுகிறது. இவனுக்குச் சோழகுலப் பெருமானார், வீர நாராயணன், சமர கேசரி, விக்கிரம சிங்கன், குஞ்சரமல்லன், சோழ சிகாமணி, சூரசிகாமணி என்னும் விருதுப் பெயர்களும் உண்டு.


  1. K.A.N. Sastry’s “Cholas’ Vol. I. pp. 159-62.