பக்கம்:சோழர் வரலாறு.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
180
சோழர் வரலாறு
 


செய்து சோழப் பேரரசை உண்டாக்குதல் வேண்டும் என்று முன்னமே திட்டம் செய்திருந்தான்; பட்டம் பெற்ற பின்னர் அத்திட்டத்தைச் செவ்வனே நிறைவேற்றி வெற்றி கண்டவன். இவனது ஆட்சிக் காலத்திலேயே இவன் தன் மைந்தனான இராசேந்திரனைப் பெரு வீரனாக்கிவிட்டமை பாராட்டற்பாலது. அதனாலன்றோ, அப்பெருமான் கடற்படை செலுத்திக் கடாரம் கைக்கொண்டான்! இராசராசன் ஆண்ட காலமே சோழர் வரலாற்றில் ‘பொற்காலம்’ என்னலாம். இவனது ஆட்சியில் ஒவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் இன்ன பிறவும்நன்குவளரத் தலைப்பட்டன, இவன் காலத்திற்றான் தேவாரத் திருமுறைகள் நாடெங்கும் பரவின, சைவ சமய வெள்ளம் நாடெங்கும் பரந்து மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சோழப் பேரரசை உண்டாக்கப் பெரும்படை திரட்டியவன் இராசராசனே ஆவன்; அப்படை இவன் நினைத்தன யாவும் தடையின்றிச் செய்துவந்தது பாராட்டற்பாலது. அரசியல் அமைப்பைத் திடமாக அமைத்தவனும் இராசராசனே ஆவன். நாகரிகம் மிகுந்த இக்கால அரசியல் அமைப்பிற்கும் இராசராசன் அரசியல் அமைப்பிற்கும் எள்ளளவும் வேறுபாடில்லை. இராட்டிரகூடர் படையெடுப்பால் துன்புற்ற சோழநாடு இராசராசன் காலத்தில் கிருஷ்ணையாறுவரை பரவியது; மேற்கே அரபிக்கடல் வரை பரவியது; தெற்கே இலங்கை வரை பரவியது எனின் இராசராசன் போர்த்திறனை என்னெனப் புகழ்வது! இப்பெருவேலையைச் செய்ய இவனுக்கு இருந்த சாதனங்களைவிடப் பெருமை பெற்றது இவனது திருவுருவமே என்னல் மிகையாமோ? இவனது திருவுருவம் கண்டவர் உள்ளத்தை ஆர்க்கத்தக்கதாக இருந்திருத்தல் வேண்டும். இவனுடைய திருவுருவமும் கோப்பெருந்தேவியின் திருவுருவமும் சிலை வடிவில் திருவிசலூர்க்கோவிலில் இருக்கின்றன. சுருங்கக் கூறின், இராசராசன் அரசியலிற் பண்பட்ட அறிவுடையவன்;