பக்கம்:சோழர் வரலாறு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

183



ஆண்டுக் கல்வெட்டு ‘காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தருளி’ எனக் குறிப்பதால்,[1] இராசராசன் காந்தளூரில் இருந்த சேரர் மரக்கலங்களை அழித்தவன் என்பது புலனாகிறது. ஆயினும், கி.பி 993 முதலே இராசராசன் கல்வெட்டுகள் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் காணக் கிடைத்தலால், இரண்டு நாடுகளையும் வென்று சோழர் ஆட்சியை அங்கு உண்டாக்கி அரசியல் அமைதியை நிறுவ நான்காண்டுகள் ஆகி இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. சேர நாட்டை வென்ற இராசராசன் அந்நாட்டில், தான் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு செய்தான் என்பது முன்னமே கூறப்பட்டதன்றோ? பஞ்சவன் மாராயன் பாண்டியனை ஒடச்செய்தான்; விழிஞம் என்னும் துறைமுகத்தைக் கைக்கொண்டான்.இராசராசனுக்குத்தென்ன பராக்கிரமன் என்னும் விருதுப்பெயர் இருத்தலாலும், பாண்டி நாட்டிற் பற்பல இடத்தும் இவன் கல்வெட்டுகள் இருத்தலாலும், பாண்டிய மண்டலம் 'இராசராச மண்டலம் என வழங்கப் பெற்றமையாலும், இராசராசன் பாண்டிய நாட்டை முழுவதும் வென்று அடக்கி ஆண்டான் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறதன்றோ?

மலை நாட்டுப் போர் : குடமலை நாடு என்பது குடகு நாடாகும். அந்நாட்டில் உதகை என்பது அரண் மிகுந்த இடமாக இருந்தது. இராசராசன் தன் தூதனைக் குடமலை நாட்டிற்கு அனுப்பினான். அவனைக் குடமலை நாட்டரசன் சிறை செய்தனனோ, அல்லது கொன்றனனோ புலப்படவில்லை. இராசராசன் அங்குப் படையெடுத்துச் சென்றான், உதகையை அடைய 18 காடுகள் தாண்டினான்; காவல்மிகுந்த உதகையை அழித்தான் குடமலைநாட்டைக் கைப்பற்றினான். இச்செயல் கி.பி. 1008 - க்குச் சிறிது முன் நடைபெற்றதாகும். இப்போரைப் பற்றிய குறிப்புகள் கலிங்கத்துப் பரணியிலும் மூவர் உலாவிலும் காணலாம்.


  1. T.A.S. II. p.4.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/185&oldid=482845" இலிருந்து மீள்விக்கப்பட்டது