பக்கம்:சோழர் வரலாறு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

சோழர் வரலாறு



இப்படையெடுப்பில் தலைமை பூண்ட தானைத்தலைவன் இராசேந்திரன் போலும்![1] இப்படையெடுப்பின்போது குடமலை நாட்டை ஆண்டவன் மீனிசா என்பவன். போர் நடந்த இடம் பனசோகே என்பது. மீனிசா, போரில் திறம்பட நடந்துகொண்டதால், அவன் வீரத்தைப் பாராட்டிய இராசராசன், அவனுக்குச் சத்திரிய சிகாமணி கொங்காள்வான் என்ற பட்டம் சூட்டி, மாளவி என்னும் ஊரை நன்கொடையாகக் கொடுத்தான்.[2]

கொல்லம், மேற்கரை நாடுகள் : இராசேந்திரன் பிறகு கொல்லத்தின்மீது சென்று, கொல்லம், கொல்ல நாடு, கொடுங்கோளுர் முதலிய பகுதிகளில் இருந்த சிற்றரசரை வென்று மேலைக் கடற்கரை நாட்டையும் கைப்பற்றி, எங்கும் பெருவெற்றி பின்தொடர மீண்டான். இவ்வெற்றிகட்குப் பின் இராசராசன் ‘கீர்த்தி பராக்கிரம சோழன்’ என்னும் விருதுப்பெயர் பெற்றான்.

கங்கபாடி : கங்கபாடி என்பது மைசூரின் பெரும் பகுதியாகும். தலைநகரம் தலைக்காடு என்பது. இவர்கள் சோழர் பேரரசை எதிர்த்து நின்றவர்; பல்லவர் கால முதலே பல நூற்றாண்டுகளாகக் கங்கபாடியை ஆண்டு வந்தவர். நுளம்பர் என்பவர் இவர்கட்கு அடங்கியவர். இராசராசன் கொங்கு நாட்டிலிருந்து காவிரியைத் தாண்டிக் கங்கபாடியில் நுழைந்தான்; முதலில் தடிகைபாடியைக் கைக்கொண்டான்; கங்கபாடியையும் கைப்பற்றினான்.[3]

நுளம்பபாடி : நுளம்பபாடி என்பது மைசூரைச்சேர்ந்த தும்கூர், சித்தல் துர்க்கம் கோட்டங்களும், பெங்களுர் கோலார், பெல்லாரிக் கோட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதனை ஆண்டவர் நுளம்பப் பல்லவர் என்பவர். இவராட்சியில் சேலம், வட ஆர்க்காடு

  1. Ep. Carnataka. Vol. 8, 125.
  2. 623 of (Appendix B).
  3. Ind Ant, VII. 30, p. 109.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/186&oldid=482847" இலிருந்து மீள்விக்கப்பட்டது