பக்கம்:சோழர் வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

சோழர் வரலாறு



அந்நாட்டு அரசமரபினருள் இரண்டு கிளையினர் தோன்றி ஒருவரை ஒருவர் நாட்டைவிட்டு விரட்ட முயன்றனர்.நாடு கலகத்திற்கு உட்பட்டது. சக்திவர்மன் என்பவன் ஒரு கட்சியினன். அவனை மற்றொரு கட்சியினர் நாட்டைவிட்டு விரட்டி விட்டனர். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சக்திவர்மன் மரபினர் நாட்டை ஆள இடமின்றித் தவித்தனர். இப்போராட்டம் கி.பி. 925-லிருந்து நடந்துவந்ததெனினும், உச்சநிலை பெற்றது இராசராசன் காலத்திலே ஆகும். சக்திவர்மன் மரபினர் அரசுக்குரிய மூத்த குடியினர். இளங்குடியினர் நாட்டைக் கவர்ந்து ஆண்டனர். சக்திவர்மன் இராசராசனைச் சரண் அடைந்தான். ஏறத்தாழக் கி.பி. 999-இல் இராசராசன் வேங்கி நாட்டைக் கைப்பற்றிச் சக்திவர்மனை அரசனாக்கினன். சக்திவர்மன் சோழனுக்கு அடங்கிய சிற்றரசனாக- ஆனால் தனி அரசனாக இருந்து வேங்கி நாட்டை ஆண்டுவந்தான். இவன் இளவலான விமலாதித்தனுக்கு இராசராசன் தன் மகளான குந்தவ்வையை மணம் செய்து கொடுத்தான்.[1] இவ்விரண்டு செயல்களாலும் கீழைச் சாளுக்கிய நாடு சோழப் பேரரசின் சிறந்த உறுப்பாக விளங்கியது. கீழைச் சாளுக்கிய மரபு சோழமரபுடன் ஒன்றுபட்டுவிட்டது; சோழப் பேரரசிற்கும் வடக்கில் அச்சம் இல்லாதொழிந்தது. இராசராசன் மருமகனான விமலாதித்தன் திருவையாற்றில் தம் மாமியார் கட்டிய கோவிலுக்குத்தானம் செய்துள்ளான்.[2]

கலிங்கநாடு : இராசராசன் தான் கலிங்கத்தை வென்றதாகக் கூறியுள்ளான். மகேந்திர மலையில் இரண்டு கல்வெட்டுகள்[3] கிடைத்தன. அவற்றில், ‘விமலாதித்தன் என்னும் குலூத நாட்டு அரசனை இராசேந்திரன் வென்றான்; வென்று மகேந்திரமலை உச்சியில் வெற்றித்துரண் ஒன்றை நாட்டினான்’ என்னும் செய்தி


  1. Ind. Ant. Vol. 14.p.52
  2. 215 of 1894
  3. 396,397, of 1896; Archaeological Survey of India, 1911-12, pp. 171-172.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/188&oldid=482850" இலிருந்து மீள்விக்கப்பட்டது