பக்கம்:சோழர் வரலாறு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

சோழர் வரலாறு



சிறப்பெய்திய இராசராசன் சயங்கொண்ட சோழன் எனப்பட்டான். அதுமுதல் தொண்டை மண்டலம் ‘சயங்கொண்ட சோழ மண்டலம்’ எனப்பட்டது. இராசராசன் உய்யக் கொண்டான் மலை (திருக்கற்குடி) நாயனார்க்குப் பொற்பட்டம் ஒன்றை அளித்தனன். அதன் பெயர் 'சயங்கொண்டசோழன்’ என்பது[1]. கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள ஊரும் ‘சயங்கொண்ட சோழபுரம்’ எனப்பட்டது.

சிற்றரசர் : பழுவேட்டரையர் கந்தன் மறவன் என்பவன் ஒரு சிற்றரசன். இப்பழுவேட்டரையர் கீழ்ப் பழுவூர். மேலப்பழுவூர்களை ஆண்டுவந்தவர். இவர் மரபிற்றான் முதற்பராந்தகன் பெண் எடுத்தான். அதுமுதல் இம்மரபினர் சோழர்க்குப் பெண் கொடுக்கும் உரிமைபெற்றிருந்தனர். இவர்கள் இராசராசனுக்குக் கீழ்த் தம்மாட்சி நடத்தினோர் ஆவர்.[2] கந்தன் மறவன் மேலப்பழுவூரில் திருத்தோட்டம் உடையார்க்குக் கோவில் கட்டினவன்; நந்தி புரத்தில் இருந்த வரிமுறையைத் தன் ஊரிலும் ஏற்படுத்தியவன்.[3] வட ஆர்க்காடு கோட்டத்தில் இலாடராயர் என்னும் சிற்றரச மரபினர் ஆண்டுவந்தனர். இவர்கள் பஞ்சபாண்டவர் மலை என்னும் இடத்தில் ஆட்சி புரிந்தோர் ஆவர். இவருள் உடையார் இலாடராயர் புகழ்விப்பவர் கண்டன் ஒருவன். அவன் மகன் உடையார் வீரசோழர் என்பவன் ஒருவன். இவனே இராசராசன் காலத்தவன்; தன் மனைவி வேண்டுகோளுக்கு இணங்க ஒரு சமணப் பள்ளிக்குத் தானம் செய்தவன்.[4] கடப்பைக் கோட்டத்தில் மகாராசப் பாடியை ஆண்டு வந்த துக்கரை என்னும் பெயருடைய வைதும்பராயன் மகன் நன்னமராயர் என்பவன் திருவல்லம் (வடஆர்க்காடு) கோவிலுக்குத் தானம் செய்துள்ளான்[5].கி.பி. 993-இல் மும்முடி வைதும்ப மகாராசன் என்பவன்


  1. S.I.I. Vol. 2. p. 312
  2. 115 of 1895
  3. 365, 367, 394 of 1924
  4. 4, 19 of 1890
  5. S.I.I. Vol. 3. No. 52
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/192&oldid=482900" இலிருந்து மீள்விக்கப்பட்டது