பக்கம்:சோழர் வரலாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

சோழர் வரலாறு



கோவிற்கவர்களில் உள்ள சிற்பங்கள், மைசூரில் இவன் கட்டிய விஷ்ணு கோவில்களும், விஷ்ணு கோவில்கட்கு இவன் செய்துள்ள தானங்களும் இவனது சமரசப்பட்ட மனப்போக்கை விளக்குவதாகும். நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் கட்டப் பொருள் உதவி புரிந்த உத்தமன் இவன் இவனது ஆட்சியில் இருந்த சிற்றரசர் சிலர், சமணர் கோவில்கட்குத் தருமம் செய்துள்ளனர் என்பதையும் நோக்க, இப்பேரரசன், தன் சிற்றரசரையும் குடிகளையும் தத்தமது விருப்பத்துக்கியைந்த சமயத்தைப் பின்பற்ற உரிமை அளித்திருந்தனன் என்பது நன்கு புலனாகின்றது. இவனது ஆட்சிக் காலத்திற்றான் பாடல் பெற்ற பல கோவில்கள் கற்றளிகளாக மாறின, புதிய பல சிவன் கோவில்கள் கட்டப்பட்டன. பல கோவில்கள் பலரால் ஆதரிக்கப்பெற்றன. கோவிற் பணிகள் வியத்தகு முறையிற் பெருகின. அவற்றின் விவரமெல்லாம் ‘சோழர் கோவிற் பணிகள்’ என்னும் பகுதியிற் பரக்கக் காண்க.

பெரிய கோவில் : சோழ மன்னரது ஆட்சிக்குப் பெரிய அறிகுறியாகவும் சிறப்பாகத் தமிழகத்தின் கலை அறிவை உணர்த்தவல்லதாகவும் இருப்பது தஞ்சைப் பெரிய கோவிலே ஆகும். இத்தகைய புதிய அமைப்புடைய கோவிலை முதன் முதல் கட்டி முடித்தவன் இராசராச சோழனே ஆவன். இக்கோவில் கோபுரம் சிறியது. உள்ளறைமீது கட்டப்பட்டுள்ள தூபி பெரியது. கோவிலின் அளவு, அமைப்பு முதலியன பொருத்தமாக அமைந்துள்ளன. இக்கோயிலின் பெயர் இராச ராசேச்சரம் என்பது. எனவே, இவன் பெயர் இராசராசன் என்பதும் பெற்றோம். இவன் கி.பி. 1004-இல் தில்லைச் சிற்றம்பலத்திற்கு நிபந்தங்கள் பல இயற்றி வழிபட்டதன் பயனாகத் தில்லைவாழ் அந்தணரால் ‘இராசராசன்’ என்பது வழங்கப்பட்டதாகும். இப்பெயர் இவனது 19-ஆம் ஆண்டுக் கல்வெட்டிற் காணப்படுகிறது. எனவே, இக்கோவில் கி.பி. 1005-இல் தொடங்கப்பெற்றது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/196&oldid=482914" இலிருந்து மீள்விக்கப்பட்டது