பக்கம்:சோழர் வரலாறு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

195



கோடல் பொருந்தும். இராசரானுடைய 23ஆம் ஆண்டு முதல் 29-ஆம் ஆண்டுவரை இக்கோவிலுக்கு வேண்டிய நிபந்தங்கள் பல கொடுக்கப்பட்டன. ஆதலின், இப்பெரிய கோவில் இவனது 20-ஆம் ஆண்டு முதல் 23 வரை கட்டப்பட்டதாகலாம்; அஃதாவது இக்கோவில் கட்டி முடிக்க ஏறத்தாழ 4 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். “யாண்டு இருபத்தைந்தாவது நாள் 275-இல் உடையார் ஸ்ரீ இராசராச தேவர் ஸ்ரீ ராசேச்சுரமுடையார், ஸ்ரீ விமானத்துச் செம்பின் தூபித் தறியில் வைக்கக் கொடுத்த செப்புக் குடம் ஒன்று. நிறை 3083 பலத்தில் சுருக்கின தகடு பலபொன் ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை 2926 கழஞ்சு” என்ற கல்வெட்டுப் பகுதியால், இராசராசன் 25ஆம் ஆண்டிற்றான் திருப்பணி முடிவுற்றுக் கும்பாபிடேகம் முடிவுற்றதெனக் கூறலாம்.

கோவில் அமைப்பு : இக்கோவில் சிவகங்கைச் சிறு கோட்டைக்குள் உள்ளது. முதற்கோபுரம் கடந்ததும் இராச ராசன் கட்டிய மற்றோர் அகன்ற கோபுரம் உண்டு. உள் நுழைந்ததும், கருங்கல், செங்கற்களால் பரப்பப் பெற்ற சுமார் 500 அடி நீளமுள்ள 250 அடி அகலமும் உள்ள ஒரு பரந்த போர்வைபோன்ற வெளிமுன் மேடை இருக்கின்றது. அதன் மீது ஒரே கல்லாலான நந்தியும் அதனைப் பாதுகாக்கக் கட்டிய நாயக்கர் மண்டபமும் உள்ளன. எதிரில் இறைவன் கோவில் விமானமும் அடுத்து அம்மன் திருக்கோவிலும் உள. உட்கோயில் இறையறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், தியாகராசர் சந்நிதியுள்ள தாபன மண்டபம், நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம் என்ற ஆறு பகுதிகளை உடையது. கோவிலிலுள்ள ஏழு வாயில்களிலும் 7 மீ உயரமும் 3 மீ. அகலமும் உள்ள 14 வாயிற்காவலர் சிலைகள் உள.

முதற் கோபுரவாயில், ‘கேரளாந்தகன் திருவாயில்’ என்பது: மற்றது ‘இராசராசன் திருவாசல்’ என்பது; கோவில் உள்வாயில் 'திரு அணுக்கன் திருவாசல் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/197&oldid=482916" இலிருந்து மீள்விக்கப்பட்டது