பக்கம்:சோழர் வரலாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

197



வேப்பமரமும் வில்வமரமும் நிற்கின்றன. பிற்காலத்தார் அம்மேடையிற் சிறு கோவில் எடுத்து, யோகியாரது உருவச்சிலை ஒன்றை அமைத்தனர். இன்றும் இக்கோவில் பலர் தொழும் இடமாக இருந்து வருகிறது.

கோபுர வாயில்கள் : இப்பெரிய கோவிலில் பண்டைக் கால வழக்குப்படியே மூன்றுவாயில்கள் உண்டு.பண்டைக் கோவில் வாயில்கள் மூன்றும் முறையே தோரண வாயில், திருமாளிகை வாயில், திரு அணுக்கன் வாயில் எனப்பட்டன என்று பெரிய புராணம் கூறும். ஆனால், இராசராசன் அவற்றுக்கு முறையே கேரளாந்தகன், இராசராசன், அணுக்கன் எனப் பெயரிட்டான்.

விமானம்-தளம்-தூபிக்குடம் : கோவில் விமானம் 75 மீ உயரமுடையது; அடி பருத்து நுனி சிறுத்த அமைப்புடையது. இதன் உச்சியில் போடப்பட்டுள்ள தளம் ஒரே கருங்கல் ஆகும். இதன் நிறை 80 டன்[1]. விமானத்தின் மேல் தூபித்தறியில் வைக்கப்பட்டுள்ள செப்புக்குடம் நிறை 3083 பலம் ஆகும். அதன்மேல் போர்த்துள்ள பொற்றகடு 2926.5 கழஞ்சு நிறையுள்ளது.

இராச ராசேச்சரத்து விமானம் ‘தக்கண மேரு’ எனப்படும். வராகமிஹிரர் இயற்றிய பிருகத் சம்ஹிதையில் கூறப்பட்டுள்ள மேரு மந்தரம், கயிலாயம், குஞ்சரம், ரிஷபம், சிம்மம் முதலிய 20 வகைப்பட்ட விமானங்களுள் இது மேரு அமைப்புடையது; தென்னாட்டில் இருப்பது; ஆதலின் ‘தக்கன மேரு’ எனப்பட்டது. இறைவன் பெயர் விடங்கர் என்பது, ‘உளியாற் செய்யப்படாதவர்’ என்பது பொருள். விமானம் சதுரமானது; 13 கோபுரமாடிகள் கொண்டது. விமான தளக்கல் நிறை 80 டன். இது தஞ்சைக்கு 20 கி.மீ. தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்ற சிற்றுாரிலிருந்து ‘சாரம்’ போட்டு இவ்வுச்சிக்கு ஏற்றப்பட்டதாம். சதுரக்கல்லின் நான்கு மூலைகளிலும்


  1. Tanjore Dt. Gazetteer.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/199&oldid=482924" இலிருந்து மீள்விக்கப்பட்டது