பக்கம்:சோழர் வரலாறு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

சோழர் வரலாறு



முறையே இரண்டு நந்திகள் உள்ளன. அவை தனித்தனி 2மீ. நீளமும் 2 மீ. அகலமும் கொண்டவை.

திருச்சுற்று மாளிகை : இதன் பெரும்பகுதி எடுத்தவன் சேனாதிபதி கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழப் பிரமராயன் ஆவன். இவன் இராசராசன் ஆணைப்படியே இதனைச் செய்து முடித்தான்[1]. திருச்சுற்றாலையில் எட்டுப் புறத்திலும் திக்குப்பாலர் எண்மர்க்கும் கோவில்கள் சமைக்கப்பட்டன. அவற்றுள் கல்லில் செதுக்கிய திசை காப்பாளர் அழகைக் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு கோவிலுக்கும் பொன் தகடு சுருக்கின. செப்புக் குடங்கள் இராசரானின் குருக்களான ஈசான சிவபண்டிதர் கொடுத்தனர்[2]. ஆயின், இன்று இருப்பவை கற்கலசங்களே ஆகும். இன்றுள்ள பிள்ளையார் கோவில் மராட்டிய மன்னர் கட்டியதாகும். முருகர் கோவிலும் பிற்காலத்ததே ஆகும். திருச்சுற்றில் சண்டேசர் ஒருவர்க்கே கோவில் எடுத்தல் பண்டை மரபாகும். அவரே கோவில் கண்காணிப்பாளர் என்பது முன்னோர் கொள்கை. அதனால் கோவிற்செயல்கள் யாவும் அவர் பெயரால் நடைபெற்று வந்தன. இம்முறையே இராசராசேச்சரத்தும் காணப்பட்டது. இன்றும் கோவிலுக்குச் சென்று மீள்பவர் சண்டேசர் கோவிலை அடைந்து, ‘சிவசொத்துகளில் ஒன்றையும் கொண்டு செல்வோமில்லை; எம் கரங்களைப் பார்த்தருளும்’ என்பார் போலத் தம் கையோடு கையைத் தட்டிக் காட்டிச் செல்லும் வழக்கு இருத்தல் காண்க.

அம்மன் கோவில் : அம்மன் கோவில், இன்றுள்ள பெரிய கோவிற்கு வடபுறத்தில் உள்ள சிவகெங்கைத் தோட்டத்தில் இருந்திருத்தல் வேண்டும். அது நாயக்க மன்னர் காலத்தில் அழிக்கப்பட்டதாம். இன்றுள்ள அம்மன்கோவில் பிற்காலத்தது. இதனை நோக்க, இன்றுள்ள பெரிய கோவில் வடபால் அகன்றிருத்தல் வேண்டும் என்பது தெரிகிறதன்றோ?


  1. S.I.I. 2. Part II. Nos 31, 33, 45
  2. Ibid, part IV. No. 90
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/200&oldid=482947" இலிருந்து மீள்விக்கப்பட்டது