பக்கம்:சோழர் வரலாறு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

199



பெரிய நந்தி : பெரிய கோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லிற் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ நீளம் 7 மீ; அகலம் 3 மீ; இப்பொழுதுள்ள நந்தி மண்டபம் நாயக்க மன்னர் காலத்தது.

திருமேனிகள் : இக்கோவிலில் இராசராசனும் அவன் அரசமாதேவியாரும் பிறரும் எடுப்பித்த திருமேனிகள் பல. அவற்றுள் சிலவே ஈண்டுக் கூறுதும் : ஒர் இலிங்கம் - அதிணின்று நான்கு கரங்களுடன் தோன்றிய சிவவடிவம் - அதனை அடுத்துப் பிரமனும் பன்றிமுகமுடைய திருமாலும் நிற்கும் இலிங்கபுராண தேவர் திருமேனி ஒன்றாகும்.பிரமன் இருந்து சடங்கு செய்யத் திருமால் நின்று நீர்வார்க்கப் பிராட்டியோடு நான்கு கைகளுடன் எழுந்தருளி நின்ற கலியான சுந்தரர் திருமேனி ஒன்று; இருடிகள் நால்வர் பக்கத்தில் இருப்பப் புலியும் பாம்பும் கிடக்கும் இரண்டு சிகரங்களையுடைய ஒருமலை உச்சியில் ஒன்பது பனையும் நாற்பத்திரண்டு கிளைகளும் போக்கிப் பொக்கணம் ஒன்று தூங்க நின்ற ஒர் ஆலமரத்தடியில் முயலகனைத் திருவடியிற் கிடத்தி நான்கு கைகளுடன் வீற்றிருக்கும் தக்கிணாமூர்த்தி திருமேனி ஒன்றாகும். சண்டேசர்க்குப் பிராட்டியோடு எழுந்தருளித் தமது திருக்கரத்தால் மலர் மாலை நல்கும் சண்டேசப் பிரசாததேவர் திருமேனி ஒன்றாகும். சதாசிவத்தினின்றும் பிரமன், திருமால், உருத்திரன், மகேச்சுரன் என்பார் தோன்றிய நிலையை விளக்கும் பஞ்ச தேக மூர்த்திகள் திருமேனி ஒன்றாகும். இனி, நாயன்மார் படிவங்களில் மலாடுடையார் படிமம் (மெய்ப்பொருள் நாயனார்) ஒன்றாகும். இவர் காலத்தால் மிக முற்பட்டவர். காடவர்கோன் கழற்சிங்கனான (மூன்றாம் நந்திவர்ம பல்லவன் கி.பி.840-865) காலத்திலேயே திருநாகேசுவரத்தைச் சேர்ந்த குமார மார்த்தாண்டபுரத்தில் இவர்க்கு ஒருகோவில் இருந்தது.[1] அப்பர், சம்பந்தர், சுந்தரர், சிறுத்தொண்டர்,


  1. 222 of 1911
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/201&oldid=483196" இலிருந்து மீள்விக்கப்பட்டது