பக்கம்:சோழர் வரலாறு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

சோழர் வரலாறு



சிவாசாரியன் பவன பிடாரன் ஆவர். திருப்பதிகம் விண்ணப்பம் செய்பவர் 48 பேர்; இவரே பிற்காலத்தில் ‘ஒதுவார்’ எனப்பட்டனர். உடுக்கை வாசிப்பவன் ஒருவன்; கொட்டிமத்தளம் வாசிப்பான் ஒருவன். இவரன்றிக் கானபாடி, ஆரியம் பாடுவார், தமிழிசை பாடுவார் எனச் சிலரும் இருந்தனர். கோவிற்பணிகளைக் குறைவறச் செய்யப் பல இடங்களிலிருந்து 400 தேவரடியார் குடியேற்றம் பெற்றிருந்தனர். கோவிலை அடுத்து வடக்கிலும் தெற்கிலும் இவர்க்கு மனைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு வேலி நிபந்தம் கொடுக்கப்பட்டது. இப்பெண்மணிகள் பெயர்கட்குமுன்னர் நக்கன் எடுத்த பாதம், நக்கன்ராசராசகேசரி, நக்கன் சோழகுல சுந்தரி என்றாற்போல ‘நக்கன்’ என்னும் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இசையில் வல்ல பெண்கள் காந்தர்விகள் எனப்பட்டனர். இசை வல்ல ஆடவர் காந்தர்வர் எனப்பட்டனர். காந்தர்வர் 75 பேர் இருந்தனர். கொட்டி மத்தளக்காரர், பக்கவாத்தியர், வீணை வாசிப்பவர், வங்கியம்பாடவியம்-மொரலியம்-உடுக்கை முதலியன முழக்குவோர் பலர் இருந்தனர். கரடிகை, சகடை உவச்சுப்பறை முதலிய பறைகளை அடிப்பவர் பலர் இருந்தனர். கோவில் பண்டாரிகள் (பொக்கிஷத்தார்), கணக்கர், மெய்காப்பார், பரிசாரகம் செய்பவர், திருவிளக்கிடுவார், மாலைகட்டுவோர், வண்ணமிடுவோர் (கோலம் போடுவோர்), சோதிடர், தச்சர், தட்டர், கன்னார், குடியர், தய்யார் (தையற்காரர்), நாவிதர், வண்ணார் முதலியவரும் நியமனம் பெற்றிருந்தனர்.இவர்க்கு வழிவழி வேலை கொடுக்கப்பட்டு வந்தது. அவரனைவரும் பெற்றுவந்த சம்பளம் நெல்லாகும். பெரிய கோவில் மூல பண்டாரம் ‘தஞ்சை விடங்கன்’ எனப் பெயர் பெற்றிருந்தது. கோவில் மரக்கால் ‘ஆடவல்லான்’ எனப் பட்டது.

பெரிய கோவில் கல்வெட்டுகள் : இராசராசன் காலத்துக் கல்வெட்டுகளே மிகப் பல. அவை அக்காலத்துப் பலரும் எழுந்தருளுவித்த திருமேனிகள், அவற்றுக்காக அவர்கள் கொடுத்த விளைநிலங்கள், பாத்திரங்கள், சின்னங்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/204&oldid=483691" இலிருந்து மீள்விக்கப்பட்டது