பக்கம்:சோழர் வரலாறு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

205


 அறுமுகன் கோவில் முதலியன : இது நாயக்க மன்னர் காலத்தது. இது யானை குதிரைகள் பூட்டிய இரதம்போல அமைந்திருத்தல் காணத்தக்கது. கணபதி கோவில் சரபோசி மன்னன் காலத்தது. நடராசர் சந்நிதியும் பிற்காலத்ததே.

வேளைக்காரப்படை : இப்படையைப் பற்றி விவரங்கள் அறிதல் இன்றியமையாதது. இப்படைவீரர் உற்ற விடத்து உயிர் வழங்கும் தன்மையோர். இவர் படைகள் 14 இருந்தன. இவர் ‘இன்னவாறு செய்வேன், செய்யா தொழியின் இன்ன கேடுறுவேன்’ என வஞ்சினம் மொழிந்து, சொன்னவாறு நடப்பவர், தம் சோர்வால் அரசர்க்கு ஊறுநேரின், தாமும் தன் உயிரை மாய்ப்பர். தம் அடியார்க்கும் கேடு உண்டாகாது காத்தலின் முருகனை வேளைக்காரன் என்பர் திருவகுப்பு நூலுடையார் எனின், இவர் தம் சிறப்பினை என்னென்பது![1] ‘வேல’ என்னும் வடசொல் ‘ஒப்பந்தம்’ முதலிய பொருள்களைத் தருவது. அது தமிழில் வேளை என வரும். அரசனிடத்தில் உண்டு உடுத்து அவனைக் காக்கவும் சமயம் நேரின் அவனுக்காக உயிர் விடுவதாகவும் ஒப்பந்தம் செய்து கொண்டு உடனுறைபவரே வேளைக்காரர் எனப்படுவர். இங்ஙனம் அமைந்த வேளைக்காரர் பல படைகளாக அமைந்திருப்பர்[2].

சீனர் உறவு : இராசராசன் கடல் வாணிகத்தைப் பெருக்கினான்; கி.பி.1015-இல் முத்துகள் முதலிய பல உயர்ந்த பொருள்களைக் கையுறையாகத் தந்து தூதுக் குழு ஒன்றைச் சீனத்துக்கு அனுப்பினான். அக்குழுவினர்பேச்சை


  1. J.M.S. Pillai’s ‘Solar Koyil Panikal’, p.31.
  2. Pandit, L. Ulaganatha Pillai’s ‘Rajaraja’ pp.39,40Vol. 14 Part II, pp. 97-111-இல் இவர்களைப்பற்றிய முழு விவரங்கள் காண்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/207&oldid=484234" இலிருந்து மீள்விக்கப்பட்டது