பக்கம்:சோழர் வரலாறு.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
209
 


விண்ணப்பம் செய்யப் பெற்றன[1]. இங்ஙணம் நாயன்மார் வரலாறுகளும் தேவாரம் ஒதுதலும் பரவியுள்ளதை அறிந்த இராசராசன் தேவாரப் பாக்களைத் திரட்டி முறைப்படுத்த உளங்கொண்டான். அதற்கு உதவிசெய்யத் தக்கவர் திரு நாரையூரில் வாழ்ந்த சைவ அந்தணப் பெரியாரான நம்பியாண்டார் நம்பி என்பவரே ஆவர் என்பதை வல்லார் கூறக்கேட்ட அரசன் திருநாரையூர் சென்றான்; அவரிடம்தன் கருத்தை அறிவித்தான். அவர் பொல்லாப்பிள்ளையார் பக்தர் ஆதலின், ஏடுகள் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் மேற்றிசையில் மூவர் கையிலச்சினை பெற்ற காப்பினையுடைய அறையில் இருத்தலை உணர்த்தினார்.உடனே அரசர் அவருடன் பொன்னம்பலம் சென்று, தில்லைவாழ் அந்தணர் கூறியபடி அப்பர், சம்பந்தர், சுந்தரர் படிமங்களை ஊர்வலமாக வரச்செய்து, அரண்மிக்க அறையில் இருந்த தேவார ஏடுகளை எடுத்தான். சில ஏடுகள் புற்றினால் அழிந்து கிடந்தன. எஞ்சியவற்றை நம்பிகள் முறைப்படுத்தினார்; திருஞான சம்பந்தர் பாடிய பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பதிகங்களை 4,5,6ஆம் திருமுறைகளாகவும், சுந்தரர் பதிகங்களை 7-ஆம் திருமுறையாகவும் வகுத்தனர்[2]. இத்திரு முறைகளைக் கோவில் தோறும் ஒத ஒதுவார்கள் நியமனம் பெற்றனர்.


  1. 373 of 1903, 349 of 1918, 129 of 1914, 99 of 1929 and 139 of 1925.
  2. திருநாவுக்கரசர் பதிகம் பாடியதில் காலத்தால் சில ஆண்டுகளேனும் முற்பட்டவர். அங்ஙணம் இருந்தும் சம்பந்தர் பாடல்கள் முன் வைக்கப்பட்டமைக்குத் தக்க காரணம் புலப்படவில்லை. இராசராசன் காலத்தில் மூவர்க்கும் படிமங்கள் செய்யப்பட்டன. மணிவாசகர்க்குச் செய்யப்பட வில்லை என்பதை நோக்கத்திருவாசகம் இராசராசற்குப்பிறகே கண்டு பிடிக்கப்பட்டது எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுள்ள நூல்களும் பின் முறையிற் சேர்க்கப்பட்டிருத்தலால் அவை யாவும் பிற் காலத்தாராற் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும் எனக் கோடல் அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமாக இருத்தல் காண்க.